கண்ணமங்கலம், ஆக.8: சந்தவாசல் அருகே அம்மன் கோயிலில் நடந்த ஆடிப்பூர திருவிழாவில், கொதிக்கம் எண்ணையில் வெறும் கையால் வடை சுட்டு பக்தர் நேர்த்திக்கடன் செலுத்தினார். இதில், 7 வடைகள் ₹1.42 லட்சத்திற்கு ஏலம் போனது. திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் அடுத்த துரிஞ்சிகுப்பம் ஆதிபராசக்தி கோயிலில் 24ம் ஆண்டு ஆடிப்பூர திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி காலை அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர், பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர் மற்றும் ஆட்டோ இழுத்தல், பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்தல், 108 பால்குட ஊர்வலம், கஞ்சி வார்த்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவின் முக்கிய நிகழ்வான கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை சுடும் நிகழ்வு மாலை நடந்தது.
இதில், விரதம் இருந்த பக்தர் வெறும் கையால் கொதிக்கும் எண்ணெய்யில் 7 வடைகளை சுட்டார். பின்னர், அந்த வடைகள் ஏலம் விடப்பட்டன. அதன்படி, வடைகள் முறையே ₹28 ஆயிரம், ₹24.1 ஆயிரம், ₹25.5 ஆயிரம், ₹24.5 ஆயிரம், ₹24 ஆயிரம், ₹15 ஆயிரம், ₹19.9 என மொத்தம் ₹1.42 லட்சத்திற்கு ஏலம் போனது. இந்த வடைகளை குழந்தை இல்லாதவர்கள் வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் பக்தர்கள் அதிக விலை கொடுத்து ஏலம் எடுத்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ேபண்டு வாத்தியங்கள், வாணவேடிக்கை முழங்க அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
The post கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை சுட்டு பக்தர் நேர்த்திக்கடன்: 7 வடைகள் ₹1.42 லட்சத்திற்கு ஏலம் போனது appeared first on Dinakaran.