×
Saravana Stores

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் உத்தவ் தாக்கரே? ராகுல், கார்கேவை சந்தித்து ஆலோசனை

புதுடெல்லி: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. மகாராஷ்டிராவில் பா.ஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். அங்கு அக்டோபரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்தியா கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு), சிவசேனா (உத்தவ் தாக்கரே) பிரிவு ஆகியவை தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்களை சந்தித்து பேசினார். உத்தவ் தாக்கரேவுடன் அவரது மகன் ஆதித்யா மற்றும் மாநிலங்களவை எம்பி சஞ்சய் ராவத் ஆகியோர் வந்திருந்தனர்.

அதை தொடர்ந்து சரத்பவார், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையன், ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங், சமாஜ்வாதி கட்சி எம்பி ஆதித்யா யாதவ் உள்ளிட்டோரையும் தாக்கரே சந்தித்தார். மகாராஷ்டிராவின் சாங்கிலி மக்களவை தொகுதியில் சிவசேனா-தாக்கரே பிரிவு வேட்பாளர் சந்திரஹர் பாட்டீலை தோற்கடித்த சுயேச்சை எம்பி விஷால் பாட்டீலும் நேற்று உத்தவ் தாக்கரேவை சந்தித்தார். அப்போது மகாராஷ்டிராவில் உள்ள இந்தியா கூட்டணி சார்பில்(மகாராஷ்டிரா விகாஸ் அகாடி) முதல்வர் வேட்பாளராக தன்னை நிறுத்த உத்தவ் தாக்கரே ஆதரவு கோரியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சந்திப்பு பற்றி உத்தவ் தாக்கரே கூறுகையில்,’ நான் சிறப்பாக பணியாற்றியதாக எனது சகாக்கள் (இந்தியா கூட்டணி தலைவர்கள்) உணர்ந்தால், உத்தவை முதலமைச்சராக்க விரும்புகிறீர்களா என்று அவர்களிடம் கேளுங்கள். மேலும் இதைப்பற்றி மக்கள் முடிவு செய்வார்கள். முதலமைச்சராக வேண்டும் என்று நான் கனவிலும் நினைத்ததுமில்லை, ஆசைப்பட்டதும் இல்லை. ஆனால், பொறுப்பில் இருந்து தப்பிச் செல்பவன் அல்ல. அந்த பொறுப்பை ஏற்று எனது திறமையை சிறப்பாக வழங்க முயற்சித்தேன்’ என்றார். இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தியையும் சந்தித்து பேச உள்ளார்.

The post மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் உத்தவ் தாக்கரே? ராகுல், கார்கேவை சந்தித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Uddhav Thackeray ,ministerial ,Maharashtra Assembly Election India Alliance ,Rahul ,Kharge ,New Delhi ,All India Alliance ,Maharashtra Assembly elections ,BJP ,Maharashtra ,Eknath Shinde ,Shiv Sena ,Chief Minister ,Legislative Assembly ,Maharashtra Legislative Assembly Election India Alliance ,
× RELATED உத்தவ் தாக்கரேவிடம் அதிரடி சோதனை