- தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்
- பச்சையப்பன் அறக்கட்டளை
- சென்னை
- தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்
- Duraikannu
- தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்
- தின மலர்
சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை கீழ் இயங்கும் ஆறு அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும் செயலர் என்று கூறிக்கொண்டு விதிகளுக்கு புறம்பாக செயல்படும் துரைக்கண்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி, அறக்கட்டளையை நிர்வகிக்க வேண்டியும் கல்லூரிக் குழுமத்திற்கான தேர்தலை நடத்தி நிர்வாகிகளை நியமிக்க வேண்டியும் அறக்கட்டளை நிர்வாகத்தைத் தமிழக அரசு, சொத்து ஆட்சியரிடம் 1921ம் ஆண்டு ஒப்படைத்தது. அரசு சொத்தாட்சியர், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற துரைக்கண்ணுவை 2021ம் ஆண்டு அறக்கட்டளைச் செயலாளராக நியமித்தார். பின்னர் முன்னாள் நீதிபதி பார்த்திபன், 2023ம் ஆண்டு அறக்கட்டளை நிர்வாகியானார். நிர்வாகியைத் தன் கைக்குள் போட்டுக் கொண்டு துரைக்கண்ணு, கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் செய்துவரும் ஊழல் எண்ணிலடங்காதவை.
ஆசிரியர்கள் பணிநீக்கத்தால் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்து, இழுத்து மூடப்படும் அபாயம் உள்ளது. இவர்மீது பாலியல் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. 252 பேராசிரியர்களும் பணி மேம்பாடு வழங்கப்படாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். செயலர் துரைக்கண்ணு மேற்கொண்ட, பொறுப்பு முதல்வர் பணி நியமனங்கள் ஆசிரியர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட பணியிட மாற்றம், போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் செல்லாது, அவைகள் தவிர்க்கப்பட வேண்டும். நான்கு கல்லூரிகளில் முதல்வர் நியமனங்களை, செயலர் துரைக்கண்ணு மேற்கொண்டுள்ளார். இது, நீதிமன்ற ஆணைக்குப் புறம்பானது. காஞ்சிபுரம் மகளிர் பச்சையப்பன் கல்லூரியில் முதல்வர் பதவிக்கான குறைந்தபட்ச தகுதி கூட இல்லாத ஒரு உதவிப் பேராசிரியரை, பொறுப்பு முதல்வராக நியமனம் செய்துள்ளார்.
சென்னைப் பச்சையப்பன் கல்லூரியின் பொறுப்பு முதல்வராக தற்போது, பேபி குல்னாஸ் பணி மூப்பு இல்லாத நிலையிலும் பணியமர்த்தினார். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் உள்ள பேரறிஞர் அண்ணா அரங்கம், சென்னை உயர்நீதிமன்றத் தடை உத்தரவை மீறி, தொடர்ச்சியாக தனியார் நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்டு, பணம் வசூல் செய்யப்படுகிறது. ஆறு ஆண்டுகளாக அறங்காவலர் தேர்தலை நடத்தாமல் இருப்பதால், நிர்வாகிகளுக்கு மாதம் ரூ.4 லட்சம் மற்றும் செயலருக்கு மட்டும் மாதம் ரூபாய் ஒரு லட்சம் என அறக்கட்டளை நிதி வீணாக செலவிடப்படுவதுடன், தேவையற்ற வழக்குகளில் நிர்வாகம் ஈடுபடுவதன் மூலம் அறக்கட்டளையின் நிதி ஆதாரமும் குறைந்து வருகிறது. அறங்காவலர் தேர்தலை, உடனடியாக நடத்துவதற்காக நியமிக்கப்பெற்ற, நிர்வாகி பார்த்திபன், ஆறு மாதங்கள் நிறைவடைந்த பின்னரும், தேர்தலுக்கான எந்தப் பணிகளையும் மேற்கொள்ளாத நிலையில், செயலருடன் சேர்ந்து கொண்டு, 132 பேராசிரியர் பணியிடங்களை நியமனம் செய்வதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றார்.
அதிகார துஷ்பிரயோகம் செய்து அதிரடி காட்டும் துரைக்கண்ணு பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 7ம் தேதி முடிவடைந்த நிலையில் கூட, கல்லூரிக் கல்வி இயக்குனரின் உரிய அனுமதியின்றி, தொடர்ந்து அறக்கட்டளைச் செயலராக நீடித்துவரும், துரைக்கண்ணு மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல், மேலும் 3 ஆண்டுகள் மீளப்பணி அமர்த்துவதற்கான அனைத்து அதிகாரத்தையும் பார்த்திபன் பயன்படுத்துவது வெட்கக்கேடான செயலாகும். இந்த அத்துமீறிய செயலை மக்கள் மேடையில் அம்பலப்படுத்தவும் இதற்குத் தெரிந்தே துணைபோகும் இடைக்கால நிர்வாகி மீது உயர்நீதிமன்றமும் தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளை மூடிய இவர்களை அரசு தண்டிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் அரசு உதவிபெறும் கல்லூரி, பள்ளிகளை அரசினுடைய நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
The post பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு செயலர் என கூறி விதிமீறி செயல்படுபவர் மீது நடவடிக்கை: தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.