×

தேன் பொறியில் வீழ்தல்… Honey Trapping Alert!

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்

நான் அறிந்த பிரபலமான பெண் ஒருவர் இவ்வாறான தேன் பொறியின் வலையில் சிக்கி ஒரு பொருளைப் போல சுயமிழந்து ஒருவரிடம் சிக்கிக் கொண்டிருந்தார். திருமணத்துக்கு வெளியேயான காமத் தேடலில் துவங்கிய உறவு என்பதால், அவரால் சமூக அந்தஸ்து கருதி வெளியே சொல்லவும் இயலவில்லை. கையறுநிலையில் அடிமையாகி தற்கொலைவரைச் சென்றவர் தற்போது உளவியல் சிகிச்சைகள் மூலம் மீண்டு வருகிறார்.

சம்பந்தப்பட்ட அந்த ஆணின் தோற்றம், நடவடிக்கை என்று கவனிக்கும்போது பெண்கள் பெரிதும் விரும்பும் (Musculine – Alpha male) கம்பீரமான ஆண் மகனாக அந்த நபர் இருக்கிறார். அதேபோல் ஆண்களை வலையில் வீழ்த்தி காரியங்களை நடத்திக்கொள்ளும் பெண்களும் தங்களுடைய கவர்ச்சிகரமான உடல், பொலிவு, தோற்றம் போன்றவற்றை வசிய ஆயுதமாக உபயோகிக்கிறார்கள் என்பதையும் உணர வேண்டும்.

இன்றைய அளவில் முறையான துறை சார் (Professional) காரணங்களுக்காக அன்றி தனிப்பட்ட பழி வாங்குதல்களுக்காகவும், ஆழ்மனதின் வக்கிர உணர்வுகளுக்கு தீனி போடுவதற்காகவும் இந்த தேன் பொறி (honey trapping) பரவலாகச் செய்யப்படுகிறது என்று உளவியல் சிகிச்சை மையங்களின் தரவுகள் உணர்த்துகின்றன. இதில் ஈடுபடுபவர்களின் பின்னணியை ஆராய்ந்தால் சிறு வயதில் ஏற்பட்ட மனப்பாதிப்புகள்கூட காரணமாக இருக்கலாம். மேலும், காதல் தோல்வி, நம்பிக்கை இழப்பு, நெடுங்காலத் தனிமை போன்றவற்றால் மனச்சோர்வுக்கு (Depression) ஆளாவர்களும் திசைமாறி, ஏதோ ஒருவகையில் யாரையோ பழிவாங்கும் நோக்கில் இதைச் செய்வதுண்டு.

தன்னை பாதிப்படையச் செய்தவர்களை திருப்பி அடிக்க முடியாத வலி, அதனை காலம் கடந்தும் மறக்க முடியாத விரக்தியில் என்ன செய்வது என்று தெரியாமல் உழலும் மனமானது தன்னைப் பிழைத்திருக்கச் செய்யும் (Survival Strategy) உயிரியல்பாக பிறரைத் தண்டிக்க ஆரம்பித்து விடுகிறது. தன் அனுபவங்களின் மூலம் சிலர் பெண்கள் மீது அதீத வெறுப்பைக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் பெண்களின் அந்தரங்கத்தில் நுழைந்து அவர்களை பிளாக்மெயில் செய்வது, தன் விருப்பப்படி ஆட்டுவிப்பது நிகழ்கிறது.

அதேபோல் ஆண்களை வெறுக்கும் பெண்களும் இவ்வாறே செயல்படுவார்கள். இன்னும் ஒருபடி மேலே போய் சிலர் ஒட்டுமொத்தமாக மனிதர்கள் மீதே வெறுப்பு கொண்டு, தனி உலகில் சுயமோகிகளாக இருப்பார்கள். இத்தகையோர் சந்திக்கும் மனிதர்களிடம் எல்லாம் அந்தரங்கத்தைத் தோண்டுவது, அவர்களை தன் பிடியில் வைத்துக்கொண்டு அதில் ஒரு சுகம் காண்பது என்று மனநோயாளியாக (Psychopath) நடந்து கொள்வார்கள்.

ஏதேனும் ஒரு ஆதாயம் இருந்தால் அந்தக் காரணத்தை நாம் உளவியல் கவுன்சிலிங் மூலமாகத்தான் அறிந்து குணப்படுத்த இயலும்.சில இடங்களில் காதல் ஈர்ப்பிலும் இவ்வகைத் தந்திரம் பயன்படுத்தப்படுகிறது. உண்மைக் காதல்போல் தோற்றம் அளிக்கும் தேன்பொறி ஆரம்பத்தில் மிக இனிமையாக இருக்கும். ஆனால், போகப்போக பிடிமானம் இல்லாமல் வீழும் நிலைக்குத் தள்ளும். காதல் திருமணம் என்ற பெயரில் ஒட்டுமொத்த வாழ்வைக் கடத்திச் சென்றுவிடும் ஆழமான தேன்பொறி (Deep honey trapping) உலகின் பழங்கால தந்திரங்களில் ஒன்று.

இத்தகு திருமணங்களில் இதுவரை நாம் கொண்டிருந்த பண்பாட்டு நம்பிக்கைகள், குடும்பப் பிணைப்புகள் என நமது கடந்த கால வாழ்வு மொத்தமும் வீண் என்று நம்ப வைத்துவிடுவார்கள். இம்மாயவலை விரிப்பது ஒரு மதத்துக்கு எதிராகவோ, குடும்ப பழக்கங்களுக்கு எதிராகவோ உள்நோக்கத்தோடு செயல்படும். அதற்குப் பிறகு உனக்கு நான் மட்டும்தான், நீ வித்தியாசமானவள் /வித்யாசமானவன் என்று நம்மை புறஉலகில் இருந்து விலக்கி, தனிமை உணர்வைக் கொடுப்பார்கள்.

குறை மதிப்பீடுகள் (Devaluing) செய்து உன்னை நான் மட்டுமே காதலிக்க முடியும், உன்னை எல்லாம் நான் மட்டுமே தாங்கிக்கொள்ள முடியும் என்று சொல்லிச் சொல்லி தாழ்த்தி விடுவார்கள். இத்தகு நீண்டகால ட்ராப்பிங்கில் (long term Honey trapping) தம்மிடம் சிக்கிக்கொண்ட எதிர்பால் நபரை திருமணத்துக்குப் பிறகு அவர்களிடம் முன்பு நட்பாக இருந்த நண்பர்கள், உறவினர்கள், உடன் பிறந்தவர்கள் ஏன் தாய் தந்தையைக்கூட எதிரிகளாக கட்டமைத்துப் பிரித்துவிடுவார்கள்.

ஒரே ஒரு சிறிய பொறிக்குள் சிக்கிய நிலை ஏற்பட்டுவிடும். காதல் திருமணம் என்ற பெயரில் சிலர் இவ்வாறு செய்வதால், முந்தைய தலைமுறைப் பெற்றோர் சிலர் பிள்ளைகளின் உண்மையான காதலையும் ஏற்காமல் வெறுத்து எதிர்க்கிறார்கள்.ஒருவர் நமக்கு வலைவிரிக்கிறார் என்பதை சில அறிகுறிகள் குறிப்புகள் மூலம் அறிந்துகொள்ளலாம். வழக்கதுக்கு மாறுபட்ட எதிர்பார்ப்புகளை நிறைவேற்றச் சொல்லி வற்புறுத்துவது, பணம் கேட்பது, திடீரென ஆபத்தில் மாட்டிக் கொண்டதாகச் சொல்வது, சந்தேகம் கொண்டு நம்மிடம் அலைபேசி மற்றும் சமூக வலைத்தள ரகசியக் குறியீட்டை (Password) தெரிவிக்கச் சொல்வது என்று இதன் கோரமுகம் அவ்வப்போது வெளிப்படும்.

எங்கு சென்றாலும் எனக்குச் சொல் என்று உங்களை எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டிய ஒரு குற்றவாளி நிலையில் வைத்திருப்பது முழுமையாக வலையில் வீழ்த்தி விட்ட நிலையில் நேரும். ஆனால், அவர்கள் விரும்பும் நேரத்தில்தான் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். உரையாடல்கள் பெரும்பாலும் முடிவடையாமல் நம் உள்ளுணர்வுக்கு ஏதோ ஒன்று சரியாக இல்லை என்று தோன்றும். இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் விழித்துக் கொண்டு உடனடியாக விலகுதல் நலம்.

உளவியல் மேதைகள் ஹசன் மற்றும் சேவர் ஆகியோர் தவிர்ப்பு நிலையர் (Avoidant) எனப்படும் சிறுவயது உளவியல் குறைபாடு கொண்டவர்கள் எளிதல் தேன் பொறியில் வீழ வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். அதாவது நெருக்கமான உறவுகள் நமக்கு கிடைக்குமென்ற நம்பிக்கை இல்லாதவர்களாகவும், கிடைத்தாலும் தன் இணை தன்னை விட்டு வெகு சீக்கிரம் பிரிந்து விடுவார்கள் (Breakup fear) என்ற அச்சத்தோடே இருப்பார்கள். உளவியலாளர் ஜான் பவுலி ‘‘மனிதன் இன்னொருவருடன் நெருக்கமாக உணரும்போது தான் தன் வாழ்வு சுழல்வதாக, நகர்வதாக நம்புகிறான். அதுவே மனோவலிமையையும், பரவசத்தையும் ஒரு சேர வழங்குவதால் ஆழ்நெருக்கம் (Intimacy) மற்றும் அந்தரங்கத்தை (Privacy ) நோக்கியே ஈர்க்கப்படுகிறான்” என்கிறார்.

எல்லா மனிதர்களுமே பாராட்டுப் பெறுவதிலும், மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதையும் விரும்புகிறார்கள். இதுதான் கவனநோக்கு (Attention motive ) என்று சொல்லப்படுகிறது. இது தவறான இயல்பு அல்ல அதுவே நம்மை சமூக இணக்கத்தோடும், நல்லுறவுகளோடும் பயணிக்க வலியுறுத்தும் என்று உளவியல் ஆராய்ச்சியாளர் செஹச்சர் (Sehachter) குறிப்பிடுகிறார். ஆனால் கவலை மிகுந்த சவாலான நேரங்களில் இந்த கவன நோக்கு, தீவிர எதிர்பால் ஈர்ப்பாக உருமாறுகிறது. அதுவே புதிய மனிதர்கள், அறிமுகமில்லாப் பயணிகள் ஆகியோரால் வெகுவாக விரைவில் ஈர்க்கப்பட்டு அவர்களிடம் தஞ்சம் அடையும் நிலைக்கு தள்ளுகிறது என்கிறார்.

எனவே ஆணோ பெண்ணோ மிகவும் ஆபத்தான தேன் பொறி உறவுகளில் சிக்கிவிடாமல் உண்மையாக நமக்கு நன்மை பயக்கும் உறவுகள் எவை? என நன்கு யோசித்துப் பிரித்தறிதல் வேண்டும். நல்லுறவு என்பது உங்கள் வளர்ச்சியை, முன்னேற்றத்தை விரும்பும். ஊக்கமும், மகிழ்ச்சியும் தரும். தற்காலிக ஈர்ப்பு, காம இச்சை, கணநேர போதை போன்றவற்றைத் தாண்டி உங்களின் பொருளாதார முன்னேற்றம், சுயமேம்பாடு ஆகியவற்றுக்கு நீங்கள் கேட்காமலே தோள் கொடுத்து ஒத்துழைப்பு கொடுக்கும்.

எனவே நாம் நெருக்கமாக இருக்கும் நபர் நம்மை எவ்வாறு நடத்துகிறார்? இது ஆரோக்கியமான உறவா? என்று கூர்ந்து கவனித்து வாழ்வையும், சுயகௌரவத்தையும் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்.முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் நம்மிடம் நெருங்கும்போது கவனமாக இருந்தல் வேண்டும்.‘‘அரிது அரிது மானிடாராய்ப் பிறத்தல் அரிது…” என்றார் அவ்வை. அப்படியான அரிய,மதிப்புமிக்க நமது இப்பிறவியைப் போலி மயக்கங்களினால் பாதிப்படையச் செய்யாமல் காத்து மானுடம் பயனுற வாழ்வோம்.

The post தேன் பொறியில் வீழ்தல்… Honey Trapping Alert! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Jayashree Kannan ,
× RELATED திரை உளவியல் எனும் சமூகக்கற்றல்