×
Saravana Stores

திண்டுக்கல் அருகே செபஸ்தியார் ஆலய திருவிழாவில் 1,000 ஆடுகள், 2,000 கோழிகளை பலியிட்டு மெகா அசைவ விருந்து

*ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் முத்தழகுபட்டியில் பழமையான புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த ஆக.4ம் தேதி புனித செபஸ்தியார் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு திருவிழா துவங்கியது. 4 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாபெரும் அசைவ அன்னதானம் நேற்று இரவு விடிய, விடிய பிரமாண்டமாக நடைபெற்றது.

முன்னதாக நேற்று காலை செபஸ்தியார் ஆலயத்தில் ஆடம்பர கூட்டு திருப்பலி, புனிதருக்கு காணிக்கை பவனி நடைபெற்றது. இதில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிய செபஸ்தியாருக்கு நேர்த்திக்கடனாக ஆடு, கோழி, முட்டை, அரிசி, தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் சமையல் பொருட்களை வழங்கினர்.

இவ்வாறாக 1,000 ஆடுகள், 2,000 கோழிகள், 3 டன் காய்கறிகள், 4 டன் அரிசி ஆகியவைகள் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்டது. இவற்றை கொண்டு காலை முதல் இரவு முழுவதும் அசைவ அன்னதானம் தயார் செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு புனிதரின் மன்றாட்டு ஜெபம் வேண்டுதல் பூஜை நடைபெற்று, விடிய, விடிய கறி விருந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, தேனி, திருச்சி என வெளியூர்களிலிருந்து இருந்து பல ஆயிரக்கணக்கானோர் சமூக நல்லிணக்கத்துடன் பங்கேற்றனர். இன்று பகலில் தேர்பவனியுடன் திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாட்டை ஊர் பெரியதனக்காரர்கள், டிரஸ்ட் மெம்பர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

ரூ.100 – ரூ.1,300 வரை நடந்த குழந்தை ஏலம்

இத்திருவிழாவில் குழந்தை வரம், நோய் நொடி நீங்க, சுகப்பிரசவம் அடைய வேண்டி, வேண்டுதல் நிறைவேறிய தம்பதிகள் தங்களது குழந்தையை காணிக்கையாக ஆலயத்தில் வழங்கினர். பின்னர் அந்த குழந்தையை கோயில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்டு அதற்கான தொகையை கோயிலில் செலுத்திய பின்னர் ஏலம் எடுத்தவரிடம் இருந்து, குழந்தையின் பெற்றோர் ஏலத்தொகையை கொடுத்து வாங்கி கொண்டனர். ரூ.100 முதல் ரூ.1,300 வரை குழந்தைகள் ஏலம் விடப்பட்டன.

The post திண்டுக்கல் அருகே செபஸ்தியார் ஆலய திருவிழாவில் 1,000 ஆடுகள், 2,000 கோழிகளை பலியிட்டு மெகா அசைவ விருந்து appeared first on Dinakaran.

Tags : Sebastiyar temple festival ,Dindigul ,St. Sebastian ,Mutthalagupatti ,Adi ,Saint Sebastian ,Sebastian temple festival ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு