×
Saravana Stores

₹18 கோடியில் வளர்ச்சித் திட்டப்பணிகள் நிறைவு புதுப்பொலிவடையும் ஒகேனக்கல் சுற்றுலா தலம்

*முதல்வர் விரைவில் திறந்து வைக்கிறார்

தர்மபுரி : ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் ₹18 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அதனை தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் விரைவில் திறந்து வைக்கிறார்.தென்னிந்தியாவில் பிரசித்தி சுற்றுலா தலங்களில் ஒகேனக்கல்லும் ஒன்று. ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர்.

கோடை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் குவிவது வாடிக்கையாக உள்ளது. ஒகேனக்கல்லில் மெயினருவி, மணல்மேடு, கூட்டாறு, சினி பால்ஸ், நீர்வீழ்ச்சி, முதலைப்பண்ணை, வண்ண மீன்கள் கண்காட்சி, தொங்கும் பாலம் மற்றும் ஆலம்பாடி பரிசல்துறை ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்த்து செல்கின்றனர். மெயினருவி மற்றும் சினிபால்சில் விரும்பி குளிக்கின்றனர்.

பரிசல் ஓட்டிகள், பரிசல் மூலம் சுற்றுலாப் பயணிகளை அருவிகளுக்கு அருகே அழைத்துச்செல்வார்கள். தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகத்தால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த வேண்டுமென சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனை ஏற்று தர்மபுரி மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை இணைந்து ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை மேம்படுத்த ₹18 கோடியில் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்ற வந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பணிகளை தொடங்கி வைத்தார். தற்போது, 99 சதவீத மேம்பாட்டு பணிகள் முடிந்து, விரைவில் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒகேனக்கல் சுற்றுலா தளம் உலக சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட புதிய சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக ₹18 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் கடந்த ஒன்றரை வருடமாக நடந்து வருகிறது. பிலிகுண்டுலுவில் இருந்து ஒகேனக்கல் நோக்கி வரும் காவிரிநீர், ஐந்தருவில் விழும் காட்சியை கண்டு ரசிக்க வாட்ச் டவர் அமைக்கப்படுகிறது. வாட்ச் டவரில் நின்று சுற்றுலா பயணிகள் ஐந்தருவியை பார்க்கலாம்.

காவிரி கரையில் இருந்து மெயினருவி, சினிபால்ஸ்க்கு செல்லும் நீரை கரையில் நின்று கண்டுகளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பரிசல் துறைநவீன முறையில் அழகுபடுத்தி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நவீன கழிப்பறை வசதி, அனைத்து வசதிகளுடன் கூடிய மீன் சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மசாஜ் செய்ய தனி இடம், பெண்கள் ஆடை மாற்ற பாதுகாப்புடன் கூடிய தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 99 சதவீதத்திற்கு மேல் பணிகள் முடிந்துள்ளது. விரைவில் தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைப்பார், என்றனர்.

3 ஆண்டில் 60 லட்சம் பேர் வருகை

கடந்த 3 ஆண்டில் 60 லட்சம் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து சென்றுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 24 லட்சத்து 34 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதன்மூலம் ₹6.48 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க, பரிசல் சவாரிக்கு மாவட்ட நிர்வாகத்தால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ₹18 கோடியில் வளர்ச்சித் திட்டப்பணிகள் நிறைவு புதுப்பொலிவடையும் ஒகேனக்கல் சுற்றுலா தலம் appeared first on Dinakaran.

Tags : Puducholivadai Okanagan ,Dharmapuri ,Okanagan ,Chief Minister ,Tamil Nadu ,Okenakal ,South India ,
× RELATED ஒகேனக்கல்லில் டன் கணக்கில் தேங்கும் பழைய துணிகள்