*10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
கொள்ளிடம் : மயிலாடுதுறை அருகே 69 ஆண்டுகால வாய்க்கால் பாலம் இடிந்து விழுந்தது. இதனால் 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பிரதான தெற்கு ராஜன் வாய்க்கால் உள்ளது. இதன்மூலம் 10,000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த வாய்க்காலின் குறுக்கே மாங்கனாம்பட்டில் 1955ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான பாலம் இருந்தது.
இந்த பாலத்தின் வழியாக கொள்ளிடத்தில் இருந்து அனுமந்தபுரம், சந்தபடுகை, திட்டுபடுகை, நாதல்படுகை, முதலைமேடு, அளக்குடி, மகேந்திரப்பள்ளி, கோதண்டபுரம், காட்டூர், வெள்ளமனம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லலாம். கொள்ளிடம் ஆற்றின் வலதுகரை சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக இந்த பாலம் இருந்து வருகிறது.
இந்த பாலத்தின் அடியில் உள்ள கான்கிரீட் தூண்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன் பாலத்தின் பக்கவாட்டில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது.இந்நிலையில் நேற்றுமுன்தினம் அனுமந்தபுரத்தில் இருந்து கொள்ளிடம் நோக்கி ஒரு லாரி கடந்தது. அப்போது பாலம் திடீரென உள்வாங்கி இடிந்தது.
இதில் லாரியின் பின்சக்கரங்கள் சிக்கி கொண்டது. பின்னர் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது. 10 அடிக்கும் மேலாக பாலம் உடைந்ததால் இந்த பாலத்தில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். தற்காலிக பாலம் அமைத்து போக்குவரத்தை துவங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
The post மயிலாடுதுறை அருகே 69 ஆண்டுகால வாய்க்கால் பாலம் இடிந்தது appeared first on Dinakaran.