×

போடி அருகே ரூ.1 கோடியில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணிகள் விறுவிறு

போடி, ஆக.7: போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் மேலசொக்கநாதபுரம், கீழசொக்கநாதபுரம், தர்மத்துப்பட்டி, கரட்டுப்பட்டி, வினோபாஜி காலனி, முதல்வர் காலனி, கிருஷ்ணா நகர், மகாலட்சுமிநகர், முத்தம்மாள்நகர், ரெங்கநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளது. இங்கு சுமார் 16ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்தப் பகுதிக்கு உப்புக்கோட்டை குண்டல் நாயக்கன்பட்டி முல்லை பெரியாற்றுக்குள் உறைகிணறு அமைத்தும், கரட்டுப்பட்டியிலிருந்து 5வது கிலோ மீட்டரில் உள்ள மங்களகோம்பை பகுதியில் இருக்கும் ஊற்றுநீரை சேகரித்தும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மக்கள் தொகை அதிகரித்ததால் குடிநீர் விநியோக அளவை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆய்வு செய்த அதிகாரிகள், முல்லைப் பெரியாற்றுக்குள் இரு உறை கிணறுகள் அமைக்கவும், மங்களக் கோம்பை பகுதியில் தடுப்பணை கட்டி ஊற்றுநீரை தேக்கி வைக்கவும் திட்டமிடப்பட்டு தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினர். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இந்தத் திட்டத்திற்கு ரூ.15 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதில், கரட்டுபட்டி பகுதியில் தலைமை நீரேற்று சுத்திகரிப்பு நிலையத்தில் மேல்நிலை தொட்டிகள், புதிய கூடுதல் குழாய்கள் பதிப்பு, குண்டல் நாயக்கன்பட்டி முல்லை பெரியாற்றுக்குள் கூடுதல் உறை கிணறுகள் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. மேலும், தற்போது கிருஷ்ணா நகர் மேற்கு பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post போடி அருகே ரூ.1 கோடியில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணிகள் விறுவிறு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Melasokkanathapuram ,Keezasokkanathapuram ,Dharmathupatti ,Karattupatti ,Vinobaji Colony ,CM Colony ,Krishna Nagar ,Mahalakshminagar ,Muthammalnagar ,Renganathapuram ,Dinakaran ,
× RELATED கார் விபத்தில் வாலிபர் படுகாயம்