×

பாகூர் ஏரிக்கரை பகுதியில் சாராயக்கடை வைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

பாகூர், ஆக. 7: பாகூர் ஏரிக்கரை வீதி சந்திப்பில் இயங்கி வந்த திறந்தவெளி சாராயக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொருட்களை அகற்ற முயன்றதால் ஊழியர்கள் சாராய கேன்களுடன் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி, பாகூர் ஏரிக்கரை வீதி சந்திப்பில் சாராயக்கடை ஒன்று பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த ஆண்டு சாராயக்கடையை ஏலம் எடுத்தவர் அங்கு கடை அமைக்க முயற்சி செய்தார். ஆனால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாராயக்கடை இருந்த இடத்தில் அங்கன்வாடி மையம் என பேனர் வைத்தனர். இதையடுத்து சாராயக்கடையை சிறிது தொலைவில் உள்ள சேலியமேடு சாலையில் அமைக்க முயற்சி செய்தனர். அங்கும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல் செய்யவே, மீண்டும் பழைய இடத்திற்கே வந்து, நேற்று காலை சாராயக்கடையை திறந்த வெளியில் திறந்து வைத்து விற்பனை செய்தனர்.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாராயக் கடையை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று ஊழியர்களை எச்சரித்தனர். மேலும் அங்கிருந்த பெண்கள் சாராய கேன் மற்றும் பொருட்களை மூட்டை கட்டி இனிமேல் சாராயக்கடையை இங்கு திறக்க முயற்சிக்கவே கூடாது என்று எச்சரித்தனர். இதை அடுத்து அங்கிருந்த ஊழியர்கள் சாராய, கேன்கள், பாட்டில்கள், பாக்கெட்டுகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் சாராயக்கடை அமைக்க அனைத்து கட்சியினரும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தும் அங்கேயே மாறி மாறி சாராயக்கடையை அமைக்க முயற்சி செய்து வருவது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post பாகூர் ஏரிக்கரை பகுதியில் சாராயக்கடை வைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Bhagur Lake ,Bagur, Aga ,Bhagur Lake Road ,Bagur Erikarai Road, Puducherry ,Dinakaran ,
× RELATED ஏடிஎம்மில் பணம் எடுத்து...