- நெசவு அமைச்சர் ஆர். காந்தி
- சென்னை
- மு.
- ஸ்டாலின்
- அமைச்சர்
- ஆர் காந்தி
- லினன்
- தமிழ்நாடு ஜவுளி துறை
- நெசவு ஆர் காந்தி
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல், நெசவாளர்களின் நலனை வேறு எந்த அரசை விடவும் அதிகபட்ச அக்கறையுடன் தொடர்ந்து பேணி பாதுகாத்து வருகிறது என்று அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார். தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று வெளியிட்ட அறிக்கை: வேட்டி சேலை குறித்த காலத்தில் வழங்கவில்லை என்றும், பள்ளி சீருடை 3 செட் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களுக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 41,35,479 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர். 3வது இணை சீருடை துணி உற்பத்தி முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது. 4வது இணை சீருடை உற்பத்தி முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த அரசினுடைய செயல்பாட்டினை ஒப்பு நோக்கும்போது கடந்த அரசு குறித்த காலத்திற்குள் சீருடை துணிகளையும், இலவச வேட்டி சேலைகளையும் வழங்கியதில்லை.
அதேபோல், இந்த அரசு பொறுப்பேற்றவுடன் பொங்கல் 2024 திட்டத்திற்கான வேட்டி சேலைகள் முழுவதும் தரமாக உற்பத்தி செய்யப்பட்டு, 31.12.2024க்கு முன்னர் அனைத்து தாலூக்காக்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத வகையில் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை பொதுமக்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. பொங்கல் 2025 திட்டத்தை பொறுத்தவரை, பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டைப் போன்று நடப்பாண்டிலும் 31.12.2024-க்கு முன்னர் வேட்டி சேலை உற்பத்தியினை முடித்து பொங்கல் பண்டிகைக்கு முன்னர் பொது மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றது முதல் நெசவாளர்களின் நலனையும் வேறு எந்த அரசை விடவும் அதிகபட்ச அக்கறையுடன் அவர்களின் நலனில் தொடர்ந்து பேணி பாதுகாத்து வருகிறது. எனவே உண்மைக்கு புறம்பான அடிப்படை ஆதாரமற்ற தேவையற்ற வதந்திகளை பரப்பும் நோக்கமுடன் செய்திகளை வெளியிடுவது பொறுப்பான அரசியல் தலைவருக்கு அழகல்ல.
The post நெசவாளர் நலனில் அதிக அக்கறையுடன் அரசு செயல்பட்டு வருகிறது: எடப்பாடிக்கு அமைச்சர் ஆர்.காந்தி பதில் appeared first on Dinakaran.