சென்னை: தமிழக கடலோரத்தில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருவதாலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழக உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது.
மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. பிற மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், தமிழக கடலோரப் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருவதாலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் இன்றும் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். 8, 9ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 10 முதல் 12ம் தேதிவரை ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இது தவிர மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். அதனால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
The post தமிழக கடலோரத்தில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நீடிப்பு 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.