ஆர்கே பேட்டை: ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பாகப்பிரிவினை பத்திரத்தை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் (பொறுப்பு) மற்றும் பத்திரப்பதிவு எழுத்தர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் கே.சிவலோகநாதன் கடந்த 4 மாதமாக பொறுப்பு சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ஆர்.ஜே கண்டிகை கிராமம், விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் பழனி (60) மற்றும் அவரது அண்ணன் வீராசாமி ஆகியோர் தங்களது 2 ஏக்கர் நிலத்தை பாகப்பிரிவினை செய்ய திட்டமிட்டனர்.
இதில் வீராசாமியின் 3 மகன்கள் மற்றும் பழனியின் 2 மகன்கள் ஆகிய 5 பேருக்கு அந்த 2 ஏக்கர் நிலத்தை பத்திர எழுத்தர் ஆறுமுகம் மூலமாக சார் பதிவாளரிடம் பாகப்பிரிவினை பத்திரம் வழங்க கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி விண்ணப்பித்துள்ளனர். இதற்கு ரசீதும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 8ம் தேதி பழனியின் சகோதரர் வீராசாமி உயிரிழந்தார். இதுகுறித்து கடந்த மாதம் 31ம் தேதி மீண்டும் சார்பதிவாளர் சிவலோகநாதனை அணுகிய பழனி, ரசீதை காண்பித்து பாகப்பிரிவினை பத்திரம் வழங்குமாறு கேட்டுள்ளார். இதற்கு சார் பதிவாளர் (பொறுப்பு) கே. சிவலோகநாதன் என்பவர், வாரிசுதாரர்கள் 5 பேரின் பத்திரங்களை வழங்க வேண்டுமானால் ஒரு பத்திரத்திற்கு ரூ.2,000 வீதம் 5 பத்திரங்களை வழங்க ரூ.10,000 லஞ்சம் கொடுத்தால் பாகப்பிரிவினை பத்திரம் வழங்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பழனி, திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தியிடம் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா மற்றும் போலீசார் கொடுத்த அறிவுறுத்தலின் பேரில் பழனி, சார் பதிவாளர் சிவ லோகநாதன், பத்திரப் பதிவு எழுத்தர் ஆறுமுகத்திடம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை நேற்று கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் சிவலோகநாதனயும், ஆறுமுகத்தையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து இருவரிடமும் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர், எழுத்தர் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி appeared first on Dinakaran.