செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், 356 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 15 நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.47 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில், 5 பயனாளிகளுக்கு ரூ.30 ஆயிரத்து 200 மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை, 4 பயனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் திருமண உதவித்தொகை, மரணமடைந்த பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் 3 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.55 ஆயிரம் மதிப்பீட்டில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, 9 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதிய பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும் இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மின் மோட்டார் பொருத்திய ஸ்கூட்டர், காதொலி கருவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நரேந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் வேலாயுதம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வெற்றிகுமார், உதவி ஆணையர் (கலால்) ராஜன் பாபு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், தொழிலாளர் உதவி ஆணையர் செண்பகராமன், நாட்டுப்புற நல வாரிய செயலாளர் (சென்னை) விமலா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இயன்முறை சிகிச்சை வாகனம்: இதேபோல், தன்னார்வ அமைப்பின் மூலம் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்காக நடமாடும் இயன்முறை சிகிச்சை வாகனத்தை கலெக்டர் அருண்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு, மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணா, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் உதயா கருணாகரன், தன்னார்வ தொண்டு நிறுவனர் ஜான் அலெக்ஸ், செங்கல்பட்டு லயன்ஸ் கிளப் தலைவர் முகமது ஆதாம், குழந்தைகள் நலக்குழு செயலாளர் தேசிங்கு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.