×

விலையில்லா வேட்டி, சேலை குறித்த எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு அமைச்சர் ஆர்.காந்தி மறுப்பு!

சென்னை: விலையில்லா வேட்டி, சேலை குறித்த எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு அமைச்சர் ஆர்.காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; விலையில்லா வேட்டி, சேலை மற்றும் மாணவர்களுக்கான 4 செட் விலையில்லா பள்ளி சீருடைகள் வழங்கும் திட்டங்களில் சுணக்கம்’ எனும் தலைப்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் அறிக்கையின் மீது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்களின் மறுப்பறிக்கை; சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் 05.08.2024 தேதியிட்ட அறிக்கையில் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் இதுவரை ஒருமுறை கூட குறித்த காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக விலையில்லா வேட்டி சேலைகளை பயனாளிகளுக்கு வழங்கவில்லை என்றும், பள்ளி சீருடை வழங்கும் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு 4 செட் சீருடைக்கு பதில் 3 செட் சீருடைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன என்றும், குறித்த காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடைகளை உடனடியாக வழங்கவும், விலையில்லா வேட்டி, சேலையை பொதுமக்களுக்கு பண்டிகை காலங்களில் குறித்த நேரத்தில் வழங்கிடவும், விலையில்லா வேட்டி, சேலை மற்றும் சீருடைகள் நெய்வதற்கான வேலைகளை தமிழக நெசவாளர்களுக்கு மட்டும் வழங்கிடவும், இதன்மூலம் தமிழக நெசவாளர்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி அறிக்கையின் மீதான மறுப்பறிக்கைக்கான குறிப்பு பின்வருமாறு சமர்ப்பிக்கப்படுகிறது. பள்ளிச் சீருடை வழங்கும் திட்டம்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு சீருடை வழங்கும் திட்டத்தை அரசு ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவுத் திட்டத்தின் கீழுள்ள மாணாக்கர்கள் பயன்பெறுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மாணாக்கர்களுக்கு 4 இணை சீருடைகள் இத்திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்வித்துறை மற்றும் சமூக நலத் துறையால் வழங்கப்படும் துணித் தேவையின் அடிப்படையில், இத்திட்டத்திற்கு தேவையான சீருடை துணிகள் கைத்தறி துறையால் உற்பத்தி செய்யப்பட்டு, சமூக நலத் துறையால் தைக்கப்பட்டு, பள்ளிக் கல்வித் துறையால் மாணவ மாணவியர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. 2023-2024-ஆம் கல்வியாண்டில் ரூ.408.63 கோடி மதிப்பிலான 534.84 இலட்சம் மீட்டர் சீருடைத் துணி இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, சமூக நலத் துறையால் சீருடைகளாக தைக்கப்பட்டு, பள்ளி கல்வித் துறையின் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 41,35,479 மாணாக்கர்கள் (மாணவர்கள் 20,57,931 + மாணவிகள் 20,77,548) பயனடைந்துள்ளனர். 2024-2025-ஆம் கல்வியாண்டுக்கு சீருடை வழங்கும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த 07.02.2024 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டு, இதுவரை முன்பணமாக ரூ.250 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு திட்டத்திற்கு சமூக நல ஆணையரின் 18.04.2024 நாளிட்ட கடிதத்தின்படி இரண்டு இணை சீருடைக்கு தேவையான துணி விபரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, நடப்பாண்டு சீருடை துணி உற்பத்திக்குத் தேவையான நூல் இரகங்கள் கூட்டுறவு நூற்பாலைகளிடமிருந்தும், தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000 ஆகியவற்றைப் பின்பற்றி ஒப்பந்தப்புள்ளிதாரர்களிடமிருந்தும் கொள்முதல் செய்யப்பட்டு, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நான்கு இணை சீருடைத் துணி உற்பத்தி செய்யப்பட்டு, நிறைவடையும் தருவாயில் உள்ளது. நாளது தேதியில் சமூக நலத்துறையால் கோரப்பட்டுள்ள மேற்படி இரண்டு இணை சீருடை துணி 237.98 இலட்சம் மீட்டர்கள் முழுவதுமாக உற்பத்தி செய்யப்பட்டு மாவட்டங்களில் உள்ள சமூக நலத்துறையின் துணி வெட்டும் மையங்களுக்கு 26.06.2024-ற்குள் 100% அனுப்பி வைக்கப்பட்டு சீருடை துணி விநியோகம் கைத்தறி துறையால் நிறைவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி அனுப்பப்பட்டுள்ள துணிகளைக் கொண்டு சமூக நலத்துறையால் சீருடைகள் தைக்கப்பட்டு, பள்ளிக் கல்வித்துறையால் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சீருடைகள் தைக்கும் பணிகள் சமூக நலத்துறையால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மூன்றாவது மற்றும் நான்காவது இணை சீருடைகளுக்கான துணித் தேவைப்பட்டியல் சமூக நலத்துறை ஆணையரிடமிருந்து எதிர்நோக்கப்படுகிறது. எனினும், முதல் இரண்டு இணை சீருடைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள துணித் தேவை பட்டியலை அடிப்படையாகக்கொண்டு, அதே அளவிற்கு மூன்று மற்றும் நான்காவது இணை சீருடை உற்பத்தி மேற்கொள்வதற்கான உற்பத்தி திட்டம் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு, மூன்றாவது இணை சீருடை துணி உற்பத்தி முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது. நான்காவது இணை சீருடை உற்பத்தி முடிவடையும் தருவாயில் உள்ளது. மேலும், 05.08.2024 வரை மூன்றாவது இணை சீருடைக்கு தேவையான டிரில் இரக சீருடை துணி 47% மும், கேஸ்மென்ட் இரக சீருடை துணி 56% மும் சர்டிங் இரக சீருடை துணி 38%-மும் மாவட்டங்களில் உள்ள சமூக நலத்துறையின் துணி வெட்டும் மையங்களுக்கு பின்வருமாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது இணை சீருடைத் துணிக்கு தேவையான சீருடை துணிகள் உற்பத்தி 100% நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இதைப்போன்று நான்காவது இணை சீருடை துணிகள் 80% நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன் எஞ்சிய துணிகள் உற்பத்தி செய்யும் பணிகள் விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது. எனினும், மாவட்டங்களில் உள்ள சமூக நலத்துறையின் துணி வெட்டும் மையங்களில் நான்கு இணை சீருடை துணிகளை கையாள்வதற்கு இடப்பற்றாக்குறை இருப்பதாக துணி வெட்டும் மைய பொறுப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சமூக நலத்துறையின் தேவையின் அடிப்படையில், மூன்று மற்றும் நான்காவது இணைக்கான சீருடை துணிகள் சமூக நலத்துறைக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது மாணவ மாணவியர்களுக்கு சீருடை வழங்குவதில் காலதாமதம் ஏற்படக்கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியதற்கிணங்க எந்தவிதமான தொய்வுமின்றி சீருடை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு இணை சீருடைத் துணிகள் ஜூலை மாதத்திலேயே வழங்கப்பட்டுள்ளது. எனினும், நடப்பாண்டில் இரண்டு இணை சீருடைத் துணிகள் முன் எப்போதும் இல்லாத வகையில் 26.06.2024-க்கு முன்னர் உற்பத்தி செய்து சமூக நலத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகிறது. இந்த அரசினுடைய செயல்பாட்டினை ஒப்பு நோக்கும்போது கடந்த அரசு குறித்த காலத்திற்குள் சீருடை துணிகளையும், இலவச வேட்டி சேலைகளையும் வழங்கியதில்லை. மேலும், சீருடை துணி உற்பத்திக்கு தேவையான 2/40s பாலிகாட் நூல் முழுவதுமாக கூட்டுறவு நூற்பாலைகளிலிருந்தும், 40s பருத்தி நூல், 130D பாலியஸ்டர் நூல் மற்றும் 155D பாலியஸ்டர் நூல் தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000-னை பின்பற்றி ஒப்பந்தப்புள்ளிதாரர்களிடமிருந்தும் கொள்முதல் செய்யப்படுகிறது.

இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நூல்கள் அனைத்தும் அரசு நூல் கிடங்குகளிலிருந்து இந்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்பட்ட தரப்பரிசோதனை 6601 SITRA / Powerloom Service Centre / Textile Committee-தரப்பரிசோதனை மேற்கோள்ளப்பட்டு, அதில் தேர்ச்சி ஆகும் தரமான நூல் மட்டுமே துணி உற்பத்திக்காக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படுகிறது எனவே நெசவாளர்களை பொறுத்தவரையில் நான்கு இணை சீருடைக்கான உத்தேச துணித் தேவையின் அடிப்படையில் நான்கு இணை சீருடை உற்பத்திக்கான உற்பத்தி திட்டம் மற்றும் அதற்கு தேவையான தரமான நூல் முழுவதுமாக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், நாளது தேதியில் இரண்டு இணை சீருடைக்கு தேவையான துணிகள் முழுவதுமாக கைத்தறி துறையால் அனைத்து மாவட்ட சமூக நலத்துறையின் துணி வெட்டும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், சமூக நலத்துறையால் சீருடைகள் தைக்கப்பட்டு பள்ளிக் கல்வித் துறையால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும், சமூக நலத்துறையின் தேவையின் அடிப்படையில் மூன்றாவது மற்றும் நான்காவது இணை சீருடைக்கான துணிகள் உடனுக்குடன் அனுப்புவதற்கு தயார் நிலையில் உள்ளது என்றும் சமர்ப்பிக்கப்படுகிறது.

வேட்டி சேலை வழங்கும் திட்டம்:- வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 2,664 கைத்தறி நெசவாளர்கள், 11,124 பெடல் தறி நெசவாளர்கள் மற்றும் 41,983 விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. 2023-2024-ஆம் ஆண்டில் பொங்கல் 2024 பண்டிகைக்கு 1.77 கோடி சேலைகள் மற்றும் 1.77 கோடி வேட்டிகளை வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு. திட்டத்தைச் செயல்படுத்த முன்பணமாக 5.449.47 கோடியினை அரசு விடுவித்து வழங்கியது. வருவாய் நிருவாக ஆணையரகம் வழங்கிய தேவை பட்டியலின் அடிப்படையில், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களால் சேலைகள் மற்றும் வேட்டிகள் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில், வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் வேட்டி சேலைகள் இதுவரை பொங்கல் பண்டிகைக்கு முன்னர் முழுமையாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதில்லை. பெரும்பாலும் பிப்ரவரி அல்லது மார்ச் திங்களில் வேட்டி சேலைகள் மாவட்டங்களில் உள்ள தாலூக்காக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, பொங்கல் 2012 மற்றும் பொங்கல் 2014 திட்டங்களுக்கு மிகவும் காலதாமதமாக முறையே அக்டோபர் 2012 திங்களிலும், ஆகஸ்ட் 2014 திங்களிலும் தாலூக்காக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அரசு பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க சீரிய முயற்சிகளினாலும் தொடர் நடவடிக்கைகளினாலும் பொங்கல் 2024 திட்டத்திற்கான வேட்டி சேலைகள் முழுவதும் தமிழ்நாட்டிலுள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களைச் சார்ந்த கைத்தறி, பெடல்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களால் தரமாக உற்பத்தி செய்யப்பட்டு, 31.12.2024-க்கு முன்னர் அனைத்து தாலூக்காக்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத வகையில் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் பொது மக்களுக்கு விநியோகம் செய்து திட்டம் குறித்த காலத்தில் நிறைவு செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு முன்னர் தரமான வேட்டி சேலைகளை பொது மக்களுக்கு விநியோகம் செய்தது பொதுமக்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.

பொங்கல் 2025 திட்டத்தை மேலும் செம்மையாக செயல்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி இத்திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்படும் தருவாயில் உள்ளது. அரசாணை வெளியிடப்பட்டவுடன் வேட்டி சேலை உற்பத்திக்கு தேவையான நூல்கள் கூட்டுறவு நூற்பாலைகளிடமிருந்தும், தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000 னைப்பின்பற்றி ஒப்பந்தப்புள்ளிதாரர்களிடமிருந்தும் கொள்முதல் செய்து, இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட தரப்பரிசோதனை மையங்களில் நூல் மாதிரிகள் தரப்பரிசோதனை செய்யப்பட்டு. தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களைச் சார்ந்த கைத்தறி, பெடல்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களால் தரமான நூல்களைக் கொண்டு வேட்டி சேலைகள் முழுவதும் உற்பத்தி செய்யப்படவுள்ளது. நூல் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் ஓரிரு தினங்களில் கோருவதற்கான பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டைப் போன்று நடப்பாண்டிலும் 31.12.2024-க்கு முன்னர் வேட்டி சேலை உற்பத்தியினை முடித்து பொங்கல் பண்டிகைக்கு முன்னர் பொது மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க பள்ளிக் குழந்தைகளுக்கான சீருடைத் திட்டம் மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியவற்றை சீரும் சிறப்புமாக எந்தவிதமான புகார்களுக்கும் இடமின்றி வழங்குவதன் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள 2,664 கைத்தறி நெசவாளர்கள், 11.124 பெடல்தறி நெசவாளர்கள் மற்றும் 41,983 விசைத்தறி நெசவாளர்கள் ஆக மொத்தம் 55,771 நெசவாளர் குடும்பங்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர் வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. இதன் மூலம் இந்த நெசவாளர் குடும்பங்கள் அனைத்தும் பயன் பெற்று வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றது முதல் நெசவாளர்களின் நலனையும் வேறு எந்த அரசை விடவும் அதிகபட்ச அக்கறையுடன் அவர்களின் நலனில் தொடர்ந்து பேணி பாதுகாத்து வருகிறது என தெரிவித்துக் கொள்கிறேன். எனவே உண்மைக்கு புறம்பான அடிப்படை ஆதாரமற்ற தேவையற்ற வதந்திகளை பரப்பும் நோக்கமுடன் செய்திகளை வெளியிடுவது பொறுப்பான அரசியல் தலைவருக்கு அழகல்ல. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post விலையில்லா வேட்டி, சேலை குறித்த எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு அமைச்சர் ஆர்.காந்தி மறுப்பு! appeared first on Dinakaran.

Tags : Minister ,R. Gandhi ,Edappadi Palaniswami ,Chennai ,R.Gandhi ,
× RELATED குட்கா வழக்கு எக்கச்சக்க கேள்விகளும்;...