×
Saravana Stores

வெண்ணாறு கோட்டம் பிள்ளை வாய்க்காலில் கரை உடைப்பு

*அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் பாதிப்பு

*விவசாயிகள் கவலை

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அம்மையகரம் பகுதியில் பிள்ளை வாய்க்காலில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதித்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் அம்மையகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன. இந்நிலையில், கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் குறுவைப் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதில், வெண்ணாறுகோட்டம் பிள்ளை வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் வந்ததால் அம்மையகரம் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இந்த வெள்ளம் அப்பகுதியில் அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ள குறுவை நெல் வயல்களில் புகுந்தது. இதனால், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

எனவே, உடனடியாக கச்சமங்கலம் தலைப்பில் பிள்ளை வாய்க்காலை முற்றிலுமாக அடைத்து, உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் சரி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர் கூறுகையில், பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டோம். கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், பிள்ளை வாய்க்கால் உடைப்பால் மூழ்கியுள்ளன. எனவே தண்ணீர்வரத்தை முற்றிலும் நிறுத்தி, உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை சீரமைக்க வேண்டும் என்றார்.

பழுதடைந்த பூதலூர் கல்லணை கால்வாய் பாலம்: பூதலூர் கல்லணை கால்வாய் பாலம் கடந்த 929ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டுள்ளது. தற்சமயம் பக்கவாட்டு சுவர்கள் மிகவும் சேதம் அடைந்து பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் வாகன போக்குவரத்திற்கும் கால்நடைகளுக்கும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் உள்ள இந்த பாலம் பல ஆண்டு காலமாக பராமரிப்பு இன்றி உள்ளது. இது குறித்து அத்துறை அதிகாரிகளிடம் கேட்டால் இப்பாலத்தை பழுதடைந்த பாலம் என்று ஒதுக்கி விட்டோம் என்று கூறுகிறார்கள்.

ஆனால் இந்த பாலமானது பூதலூர் நகருக்கும் தென் பகுதியில் உள்ள பல ஊர்களுக்கும் இணைப்பு பாலமாக இருப்பதோடு பூதலூர் தொடர்வண்டி நிலையத்திற்கும் இப்பாலம் ஒன்றே வழியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித் துறையும் போர்க்கால அடிப்படையில் இப்பாலத்தை பழுது நீக்கி பராமரித்து இப்பகுதி மக்களின் உயிர்களையும் பாலத்தையும் காத்திடுமாறு பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post வெண்ணாறு கோட்டம் பிள்ளை வாய்க்காலில் கரை உடைப்பு appeared first on Dinakaran.

Tags : AVANARU ,KOTAM ,PILLAI GUAKAL ,Thanjavur ,Pillai Vayakal ,Ammayakaram ,Thiruvaiyaru, Thanjavur district ,Thanjavur District ,Vannaru ,Kottam Pillai ,Shari Breakup ,
× RELATED மதுரை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள...