×

வேலூர் அருகே செதுவாலையில் ஏரியை ஆக்கிரமித்து பெட்ரோல் பங்க் அமைப்பதை தடுக்க வேண்டும்

*கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

வேலூர் : வேலூர் அருகே ஏரியை ஆக்கிரமதித்து பெட்ரோல் பங்க் அமைப்பதை தடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ மாலதி, திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் யாரேனும் இறந்தால் கிராமத்தையொட்டிய மயானத்தில் அடக்கம் செய்து வந்தோம். ஆனால் தற்போது மயானத்திற்கு சென்று வந்த பாதை அருகே ஒருவர் நிலத்தை வாங்கி வீடு கட்டியுள்ளார். மயானத்திற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து கால்நடைகள் கட்டி வைத்துள்ளார். சமாதிகளையும் சேதப்படுத்தி வருகிறார். எனவே சுடுகாடு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

முன்னாள் முப்படை நலச்சங்கம் சார்பில் அளித்த மனுவில், ‘கே.வி.குப்பம், காட்பாடி பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் முப்படை வீரர்கள் உள்ளோம். லத்தேரி கிராமத்தை தலைமையிடமாக கொண்டு முப்படை வீரர்கள் நலச்சங்கம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு கட்டிடம் கட்ட இடம் வழங்கக்கோரி பலமுறை மனு அளித்துள்ளோம். எனவே எங்களுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளியை சேர்ந்த ராஜா என்பவர் அளித்த மனுவில் கூறுகையில், ‘எனது மகளுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின்னர் எங்கள் குடும்ப ரேஷன் கார்டில் இருந்த எனது மகளின் பெயரை நீக்கி விட்டோம். பிறகு பொன்னையில் உள்ள அவரது கணவரின் குடும்ப ரேஷன் கார்டில் சேர்க்க செல்லும்போது, எனது மகளின் பெயர் இறந்தவர்களின் பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இறந்தவரின் பட்டியலில் உள்ள மகளின் பெயரை நீக்க வேண்டும், ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றார்.

காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறுகையில், ‘காட்பாடி மெட்டுக்குளத்தில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் இடத்தின் அருகே பெட்ரோல் பங்க் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். அந்த இடத்தை ஆர்டிஓ ஏற்கனவே ஆய்வு செய்து பெட்ரோல் பங்க் அமைக்க அனுமதி தரவில்லை. ஆனால் தற்போது அந்த இடத்தை மாவட்ட அதிகாரி ஒருவர், மீண்டும் ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளார்.

எனவே அந்த இடத்தில் பெட்ரோல் பங்க் அமையாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.மேலும், அணைக்கட்டு தாலுகா ஒக்கனாபுத்தை சேர்ந்த ஒருவர், செதுவாலை ஏரியை ஆக்கிரமித்து பெட்ரோல் பங்க் வைக்க ஏற்பாடு செய்து வருகிறார். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே அந்த இடத்திலும் பெட்ரோல் பங்க் அமைக்க கூடாது’ என தெரிவித்துள்ளனர்.

கணியம்பாடி அடுத்த விளாங்காடு, துத்திப்பட்டு, வேப்பம்பட்டு, அரியூர் விஸ்வநாதன் நகரை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும்ேமற்பட்டோர் அளித்த மனுவில், தங்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் எனக்கூறியுள்ளனர்.அணைக்கட்டு அடுத்த கருங்காலிகுப்பத்தை சேர்ந்த மீனாட்சி என்பவர் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவுக்கு நன்கொடை வாங்கவில்லை. இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தோம். போலீசார் எங்களையும், கிராம மக்களையும் விசாரித்தனர்.

அதற்கு பின்னர், எனது மகளை நாங்கள் எனது வீட்டில் சேர்க்ககூடாது எனக்கூறி கிராம மக்கள் ஒவ்வொருவரிடம் மன்னிப்பு கேட்க வைத்தனர். பின்னர் கோயில் நன்கொடை வாங்கிக்கொண்டனர். ஆனால் திருவிழாவின்போது, கரகம் எங்கள் தெருவில் வரும்போது போலீசில் புகார் ெகாடுக்கிறாயா? எனக்கூறி எனது மகனை தாக்கினர். தடுக்க வந்த என்னையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். ஊரை விட்டு செல்லும்படி மிரட்டுகின்றனர் என தெரிவித்தார்.

தொடர்ந்து, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, 2 பேருக்கு காசோலைகள் வழங்கப்பட்டது. அதேபோல், மகளிர் உரிமைத்தொகை, வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.

தாலுகா வாரியாக மனுக்கள் பதிவு

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு நாளில் மனுக்களை கொண்டு வருபவர்களை, வரிசையில் நிற்க வைத்து ஊழியர்கள் மனுவில் ‘சீல்’ வைப்பார்கள். பின்னர் அவை கணினியில் பதிவு செய்யப்படும். தொடர்ந்து பொதுமக்கள் கலெக்டர் மற்றும் அதிகாரியிடம் நேரடியாக மனுக்களை வழங்குவார்கள்.

இந்நிலையில் நேற்று முதல் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது 6 தாலுகாவுக்கு தனித்தனியாக கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கவுன்டர்களில் பொதுமக்களின் மனுக்களை சீலிட்டு கணினியில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த மனுக்களை பொதுமக்கள் அதிகாரிகளிடம் வழங்கினர். காலியாக கவுண்டர்களில் அதிக பொதுமக்கள் மனுக்கள் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வேலூர் அருகே செதுவாலையில் ஏரியை ஆக்கிரமித்து பெட்ரோல் பங்க் அமைப்பதை தடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Chetuvalai ,Vellore ,Vellore Collector ,Collector ,Subbulakshmi ,Dinakaran ,
× RELATED விநாயகர் சிலைகளை கரைத்த குட்டையில்...