×
Saravana Stores

தொடர் விபத்துகளால் உயிர்ப்பலிகளை தடுக்க திருச்செந்தூர் – நெல்லை நெடுஞ்சாலையில் நத்தக்குளம் வளைவில் சிக்னல்கள் அமைப்பு

*வாகன ஓட்டிகள் வரவேற்பு

திருச்செந்தூர் : நாளுக்குநாள் அதிகரித்து வரும் விபத்துகளால் உயிர்ப்பலிகளை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் திருச்செந்தூர்- நெல்லை நெடுஞ்சாலையில் நத்தக்குளம் வளைவில் சிக்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதை வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.ஆன்மீகம் செழித்தோங்கும் கோயில் நகரங்களான திருச்செந்தூர் மற்றும் நெல்லையை சுமார் 55 கி.மீ. தொலைவிலான நெடுஞ்சாலை இணைக்கிறது.

இந்த நெடுஞ்சாலை திருச்செந்தூரில் இருந்து நகராட்சி எல்கையை தாண்டி காயாமொழி சந்திப்பை கடந்து நேராகச் சென்றால் நத்தக்குளம் கிராமத்தில் இரு வளைவுகளை தாண்டி அதன்பிறகு நல்லூர் ரயில்வே கேட், குரும்பூர், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், செய்துங்கநல்லூர், கிருஷ்ணாபுரம், வி.எம்.சத்திரம் அருகில் பாளையங்கோட்டை எல்கையை தொட்டு நெல்லையில் சேர்கிறது.

இந்த நெடுஞ்சாலையில் தினமும் 24 மணி நேரமும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் கார், வேன், பேருந்துகள், அரசு பேருந்துகள், தொழில் நிமித்தமாக சரக்குவாகனங்கள், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் என ஆயிரக்கணக்கானவைகள் கடந்து செல்கின்றன.

அதிலும் திருச்செந்தூரில் அடிக்கடி நடக்கும் திருவிழாக்களுக்கும், வார விடுமுறைநாட்களுக்கும் வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் வாகனங்கள் எண்ணிலடங்காதவை. இதனால் பக்தர்கள் மற்றும் போக்குவரத்து வசதிக்காகவும் இச்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை – கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ் ரூ. 282 கோடி மதிப்பில் திருச்செந்தூர்- பாளையங்கோட்டை- அம்பாசமுத்திரம் வரையிலும் நெடுச்சாலை விரிவாக்கப்பணி கடந்த 2021ம் ஆண்டில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

இச்சாலையானது சுமார் 10.5 மீட்டர் அகலத்தில் தார் சாலையுடன் 2 மீட்டர் அகலத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதையுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் நெல்லை – திருச்செந்தூர் வரையில் சுமார் 54 கி.மீ. தொலைவில் தொழிற்தட சாலையானது திருச்செந்தூர், குரும்பூர், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி வரையில் மெயின் ரோட்டிலும், ஆழ்வார்தோப்பு பாலம் வழியாக புறவழிச்சாலையாகவும் மாறி மீண்டும் பொன்னன்குறிச்சி வழியாக மெயின் ரோட்டிலும் இணைகிறது.

இந்த நடைபாதையுடன் கூடிய ரோடு விரிவாக்கப்பணி தற்போது நெல்லையில் இருந்து திருச்செந்தூர் வரையிலும் 90% அளவுக்கு நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி துவங்கி 2023ம் ஆண்டு செப். 7ம் தேதியில் நிறைவு பெற வேண்டிய ரோடு ஒர்க் முடியும் தருவாயில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பலத்த மழை வெள்ளத்தால் சேதமடைந்தது.

இதையடுத்து இச்சாலை மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் திருச்செந்தூர் – நெல்லை வரையிலான நடைபாதையுடன் கூடிய சாலை விரிவாக்கப்பணி முழுவதும் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்செந்தூர் வரும் பாதயாத்திரை பக்தர்களின் நலன்கருதி நடைபாதை அமைக்கும் பணியையும், இரவு நேரத்தில் வெளிச்சத்துக்காக சோலார் விளக்குகள் பொருத்திடும் பணியையும் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

நத்தக்குளம் வளைவு

வரலாற்றுச் சிறப்புமிக்க திருச்செந்தூர் – நெல்லை நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப்பணியின் போது பெரும்பாலான வளைவுகள் நேராக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க முடிகிறது. ஆனால் தவிர்க்க முடியாததால் நத்தக்குளம் பகுதியில் வளைவைக் கடந்து தான் வாகனங்கள் எதிரெதிரே பயணிக்கின்றன. இதனால் பளப்பளப்பான சாலை வளைவு தெரியாமல் வாகனங்கள் வேகமாக வரும்போது கட்டுப்பாட்டை இழந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

இதனைத் தவிர்க்கவும், வாகன ஓட்டிகள் வளைவை அறிந்து கொள்வதற்கு வசதியாக நத்தக்குளம் வளைவில் தொடங்கும் இடங்களில் எதிரெதிர் திசைகளில் விளக்குடன் கூடிய சிக்னல்கள் மற்றும் அறிவிப்பு பலகை போக்குவரத்து போலீசாரால் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையில் வேகத்தை குறைக்க அறிவுறுத்தும் கோடுகளும் நெடுஞ்சாலைத்துறையினரால் போடப்பட்டுள்ளது. இந்த சிக்னல்கள் பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் வாகன ஓட்டிகளை ஆபத்திலிருந்து காத்து வருவதாக ஓட்டுநர்கள் வரவேற்கின்றனர்.

எச்சரிக்கை பலகை அவசியம்

இதனிடையே திருச்செந்தூர்- நெல்லை நெடுஞ்சாலையில் நத்தக்குளம் வளைவு மற்றும் அதனருகே உள்ள வள்ளிவிளை சந்திப்பிலும் சாலை விரிவாக்கப்பட்டதற்குப் பிறகு அடிக்கடி விபத்துகள் நடந்துள்ளது. நத்தக்குளம் வளைவில் கடந்த ஜூன் 22ம் தேதி கார் – வேன் மோதியதில் மதுரை, அம்மாபட்டியைச் சேர்ந்தவர் உணவு பாதுகாப்புத்துறை எஸ்.ஐ. கார்த்திகேயன் படுகாயமடைந்து உயிரிழந்தார். அதே வளைவில் கடந்த ஜூலை 22ம் தேதி பள்ளி வாகனம் மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நத்தக்குளம் பகுதியைச் சேர்ந்த லிங்கம் மற்றும் ரமேஷ் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடந்த ஜூலை 25ம் தேதி நத்தக்குளம் வளைவில் கட்டுப்பாட்டை இழந்த மணல் ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்ததில் குரும்பூரைச் சேர்ந்த சூர்யா (22) அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார். ஜூன் 22 மற்றும் ஜூலை 22ம் தேதி இரு வேறு விபத்துகளில் 3 பேர் இருந்தனர். எனவே நத்தக்குளம் வளைவில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அங்கு எச்சரிக்கை பலகையை அவசியம் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வைத்தால் பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் பெரிதும் பயனடைவர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

The post தொடர் விபத்துகளால் உயிர்ப்பலிகளை தடுக்க திருச்செந்தூர் – நெல்லை நெடுஞ்சாலையில் நத்தக்குளம் வளைவில் சிக்னல்கள் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Nattakulam ,Tiruchendur – Nellai highway ,Thiruchendur ,Thiruchendur-Nellai highway ,Tiruchendur ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு...