×

நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளர் கிட்டு வெற்றி: போட்டி வேட்பாளர் தோல்வி

நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணன் கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய மேயர் வேட்பாளராக திமுக சார்பில் 25வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. திமுக மேயர் வேட்பாளர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் சைக்கிளில் தனது ஆதரவு கவுன்சிலர்களுடன் வந்து தேர்தல் நடத்தும் அலுவலரான ஆணையாளர் சுகபுத்ராவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். யாரும் எதிர்பாராத வகையில் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் போட்டி வேட்பாளராக மனு செய்தார்.

வாக்குப்பதிவில் அதிமுக கவுன்சிலர் ஜெகந்நாதன் என்ற கணேசன் பங்கேற்கவில்லை. மற்ற 54 கவுன்சிலர்களும் வாக்களித்தனர். இதில் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்றார். 1 வாக்கு செல்லாததாக இருந்தது. 7 வாக்குகள் வித்தியாசத்தில் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக ஆணையாளர் சுகபுத்ரா அறிவித்தார். மேயராக தேர்வு பெற்ற கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அளித்த பேட்டியில், நெல்லை மாநகராட்சியை நம்பர் ஒன் மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

* கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் அறிவிப்பு
கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார், கடந்த ஜூலை 3ம் தேதி மருத்துவ காரணங்களுக்காக மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, திமுக சார்பில் புதிய மேயர் வேட்பாளராக 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகியை நேற்று கோவையில் நடந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, சு.முத்துசாமி ஆகியோர் அறிவித்தனர். மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரங்கநாயகி, கோவை கணபதி பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கிறார். இவரது கணவர் ராமச்சந்திரன், 29வது வார்டு திமுக செயலாளராக உள்ளார். மேயருக்கான மறைமுக தேர்தல் இன்று காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில், ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு, மேயராக பதவி ஏற்க உள்ளார்.

The post நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளர் கிட்டு வெற்றி: போட்டி வேட்பாளர் தோல்வி appeared first on Dinakaran.

Tags : Nellie Municipal Corporation ,Kittu ,Nellai ,DMK ,Ramakrishnan ,Nellai Corporation ,PM ,Saravanan ,Nella Corporation ,
× RELATED 116வது பிறந்த நாள் நெல்லையில் அண்ணா சிலைக்கு கட்சியினர் மரியாதை