×
Saravana Stores

மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க கோரி சென்னையில் வரும் 8ம் தேதி ஆர்ப்பாட்டம்: மணல், சவுடு லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வலியுறுத்தி சென்னையில் வரும் 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அச்சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு பல மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரை எடுத்து அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். தமிழகத்தில் அமலாக்கத் துறை சோதனைக்குப் பிறகு கடந்த 9 மாதங்களுக்கு மேல் மணல் குவாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அத்துடன் மணல் குவாரிகளில் மூன்றாம் நபர் அதாவது ஒப்பந்ததாரர் தலையீடு இல்லாமல் மணல் குவாரிகளை அரசே நேரடியாக நடத்த வேண்டும் என்று மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே தாமதமின்றி மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும். அரசு நேரடியாக மணல் குவாரிகளை நடத்தினால் மக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைக்கும். மணல் குவாரிகளில் லாரிகள் வேலையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கின்றனர். மேலும் கட்டுமானத்திற்கு சவுடு மண்ணிற்கு கூடுதல் தேவை இருப்பதால் சவுடு மண் குவாரிகளையும் அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும்.

மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்து விற்பனை செய்ய தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து மணல், எம்.சாண்ட் போன்றவை கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு தடையின்றி சென்று கொண்டிருக்கிறது. அதுபோல ஆந்திராவில் இருந்து ஆற்று மணல் கொண்டு வர தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். எனவே மூடிக்கிடக்கும் மணல் குவாரிகள் மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் மணல் குவாரிகளைத் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் வரும் 8ம் தேதி காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மறுநாள் 9ம் தேதி திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க கோரி சென்னையில் வரும் 8ம் தேதி ஆர்ப்பாட்டம்: மணல், சவுடு லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sand and Saud Lorry Owners Association ,Tamil Nadu Integrated Sand and Soud Truck Owners Association ,Tamil Nadu ,Press Forum ,Chepakkam, Chennai ,Sand, Soud Truck Owners Association ,Dinakaran ,
× RELATED சென்னை வேளச்சேரியில் ஜவுளிக்கடை உரிமையாளரை கொல்ல முயன்றவர் கைது