×

இஸ்ரேல் மீது போர் தொடுப்பதை தடுக்க ஈரான், ஹிஸ்புல்லாவுக்கு அழுத்தம் தர வேண்டும்: ஜி7 நாடுகளிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

ஜெருசலேம்: ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், ஹமாசுக்கு ஈரானின் ஆதரவு அமைப்புகளாக லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுதி அமைப்புகள் பக்கபலமாக இருந்து வருகின்றன. இதனால், லெபனான், ஏமன், சிரியாவில் இருந்தும் இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதற்கிடையே, ஹமாசின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் ஹிஸ்புல்லா தளபதி புவாத் சுக்கூர் படுகொலையைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் இடையேயான பகை வலுத்துள்ளது.

ஈரான், ஹிஸ்புல்லா இணைந்து இஸ்ரேல் மீது போர் தொடுக்க முடிவு செய்துள்ளன. எந்த நேரத்திலும் போர் தொடங்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது. இதற்கு முன்னெச்சரிக்கையாக இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்கா, இங்கிலாந்து ராணுவம் தனது போர்க்கப்பல்கள், போர்விமானங்களை மத்திய கிழக்கு நோக்கி அனுப்பி வைத்துள்ளது. இந்த சூழலில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஜி7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து நாடுகளுடன் கான்பரன்ஸ் தொலைபேசி அழைப்பில் நேற்று பேசி உள்ளார். அதில், 24 மணி நேரத்திலோ அல்லது 48 மணி நேரத்திலோ இஸ்ரேல் மீது ஈரான், ஹிஸ்புல்லா படைகள் போர் தொடங்கலாம் என்றும், அதனை தடுக்க தூதரக ரீதியாக ஈரான், ஹிஸ்புல்லாவுக்கு அழுத்தம் தர வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஜி7 அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘சமீபத்திய நிகழ்வுகள் பிராந்தியத்தில் பெரிய அளவிலான மோதலை தூண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளன. இந்த சமயத்தில் ஜி7 அமைப்பான பதற்றத்தை குறைக்கவும், நிலைமை மோசமாகாமல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவும் கடமைப்பட்டுள்ளது’ என கூறி உள்ளது. அதே சமயம், ஈரான் தாக்குதல் நடத்தினால் அதற்கான பெரிய அளவிலான பதிலடியை சந்திக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

The post இஸ்ரேல் மீது போர் தொடுப்பதை தடுக்க ஈரான், ஹிஸ்புல்லாவுக்கு அழுத்தம் தர வேண்டும்: ஜி7 நாடுகளிடம் அமெரிக்கா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Iran ,Hezbollah ,Israel ,US ,G7 ,Jerusalem ,Hamas ,Gaza ,Lebanon ,Yemen ,Houthi ,Syria ,America ,Dinakaran ,
× RELATED லெபனானில் வாக்கி டாக்கி வெடித்து 3 பேர் பலி