தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் தூய்மைப் பணியாளர்கள் குப்பை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தாம்பரம் மேம்பாலத்திலிருந்து முடிச்சூர் பிரதான சாலைக்கு இறங்கும் இடத்தில் அவர்லேண்ட் என்ற நிறுவனத்தில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாநகராட்சிக்கு பணியாற்றி வரும் தூய்மைப்பணியாளர்கள் டிராக்டர் மூலம் சென்று குப்பை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காலை சுமார் 6.30 மணியளவில் கோயம்பேட்டில் இருந்து தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு, தாம்பரத்திற்கு வந்த லோடு வேன் ஒன்று தாம்பரம் மேம்பாலத்தில் இருந்து முடிச்சூர் சாலையில் அதிவேகமாக இறங்கியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தூய்மைப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தூய்மைப்பணியாளர்கள் மீது வேகமாக மோதி, சாலையோரம் நின்று கொண்டிருந்த குப்பை சேகரிக்கும் டிராக்டர் மீது மோதி நின்றது.
இதில், தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தர்மன்னா (38) என்பவர், 2 வாகனங்களுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், லக்ஷ்மணன் (23) என்ற தூய்மைப்பணியாளர் காயமடைந்தார். இதைக்கண்டு, அதிர்ச்சியடைந்த தர்மன்னாவின் மனைவி அனிதா (35) மற்றும் தூய்மைப்பணிகளில் ஈடுபட்டிருந்த சக தூய்மைப்பணியாளர்களும் கூச்சலிட்டு கதறி அழுதனர். சத்தம்கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், லோடு வேன் ஓட்டுநரை பிடித்து, இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், தர்மன்னாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்த லக்ஷ்மணனை சிகிச்சைக்காகவும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், லோடு வேன் ஓட்டுநரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், லோடு வேன் ஓட்டுநர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் (23) என்பதும், பாலத்தின் கீழே இறங்கும்போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது.
தகவலறிந்து வந்த தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், விபத்துக்குள்ளான இடத்தை பார்வையிட்டு விபத்து குறித்து மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், விபத்தில் காயமடைந்த தூய்மைப் பணியாளருக்கு என்ன உதவி வேண்டுமோ அதனை உடனுக்குடன் செய்து தரவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தூய்மைப்பணியாளர் உயிரிழந்த சம்பவம் சக தூய்மைப்பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பின்னர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தர்மன்னா உடலுக்கு தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டலக்குழு தலைவர் டி.காமராஜ் நேரில் சென்று, மலர் அஞ்சலி செலுத்தினர்.
The post தறிகெட்டு ஓடிய லோடு வேன் மோதி தூய்மைப்பணியாளர் பலி appeared first on Dinakaran.