×

ஆதிதிராவிடர் – பழங்குடியின நலத்துறை சார்பில் சிறந்த எழுத்தாளர் படைப்புகளை வெளியிட உதவித்தொகை: ஆகஸ்ட் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட வழங்கப்படும் உதவித்தொகைக்கு ஆக.8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த எழுத்தாளர்களின் இலக்கிய படைப்புகளில் 11 நபர்களது படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களது படைப்பினை வெளியிட உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 9 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரச்னைகளை பற்றி எழுதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத ஒரு எழுத்தாளர் மற்றும் பழங்குடியினர் பற்றி எழுதும் ஆதிதிராவிடர் – பழங்குடியினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத எழுத்தாளர் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படுவர். இதனை ஊக்குவிக்கும் வண்ணம் இவர்களது சிறந்த இலக்கிய படைப்பினை வெளியிட ரூ. 1 லட்சமாக நிபந்தனைகளுக்குட்பட்டு வழங்கப்படவுள்ளது. அவை பின்வருமாறு:

எழுத்தாளர்களுக்கு வயது வரம்பு இல்லை.

 கதை, கட்டுரை, கவிதை, வரலாறு மற்றும் புதினம் ஆகியவை எதுவாகவும் இருக்கலாம். இருப்பினும் தமிழ் மொழியிலேயே படைப்பு இருக்க வேண்டும். பிறமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த தமிழ் மொழி படைப்பாகவும் இருக்கலாம்.

 எம்.பில்., பி.எச்.டி., போன்ற படிப்புகளுக்குத் தயாரிக்கப்படும் ஆராய்சி கட்டுரைகளுக்கு அவை அரிதான சிறப்புடையதாக இருக்க வேண்டும்.

 படைப்புகள் 90 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

 ஏற்கனவே சந்தையில் வெளியிடப்பட்டுள்ள படைப்புகளை கொண்டு விண்ணப்பித்தல் கூடாது.

 ஒரு முறை விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளர் 5 ஆண்டுகளுக்கு பிறகே விண்ணப்பிக்க வேண்டும்.

 படைப்புகளை தேர்ந்தெடுத்தல் குறித்து அரசால் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் முடிவே இறுதியானது.

எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கான விண்ணப்பங்களை தொடர்புடைய மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும், ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்திலும் வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், tn.gov.in/forms என்ற இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ஆக.30ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். அந்தவகையில், விண்ணப்பதாரர்கள் தங்களது படைப்பினை இரு நகல்களிலும் டிஜிட்டல் முறையிலும், உரிய படிவத்தில் தவறாமல் கைபேசி எண்ணினை குறிப்பிட்டு உரிய காலத்திற்குள் இயக்குநர், ஆதிதிராவிடர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை-05 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆதிதிராவிடர் – பழங்குடியின நலத்துறை சார்பில் சிறந்த எழுத்தாளர் படைப்புகளை வெளியிட உதவித்தொகை: ஆகஸ்ட் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Adi Dravidar ,Tribal Welfare Department ,CHENNAI ,Adi Dravida ,Adi Dravidar and Tribal Welfare Department ,
× RELATED ஆதிதிராவிடர் நலத்துறை நிதியில் 97.6%...