×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள் தரிசனம் குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம்: பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்தகுடிமக்கள் தரிசனம் குறித்து இணைய தளத்தில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்தகுடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனம் குறித்து தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது.

இவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தினந்தோறும் 1000 மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீட்டை ஒவ்வொரு மாதமும் 23ம்தேதி மாலை 3 மணிக்கு 3மாதங்களுக்கு முன்பே வெளியிடுகிறது. டிக்கெட் வைத்திருப்பவருக்கு ₹50 மதிப்புள்ள லட்டு இலவசமாக சுவாமி தரிசனத்திற்கு பிறகு வழங்கப்படும். ஆன்லைனில் பதிவு செய்து டிக்கெட் பெற்று வரும் பக்தர்களுக்கு திருமலையில் உள்ள திருமலை நம்பி கோயிலுக்கு அருகில் உள்ள சிறப்பு வரிசையில் ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3 மணிக்கு அனுமதிக்கப்படுகிறது.

ஆனால் டிக்கெட் இன்றி நேரடியாக வந்தால் இந்த வரிசையில் அனுமதிக்கப்படும் என்ற சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம். பக்தர்கள் சரியான தகவல்களுக்கு தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tirumala.org, https://ttdevastanms.ap.in ஐ மட்டுமே பார்த்து உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று திருப்பதி-திருமலை தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.3.90 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 75,356 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 21,815 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.90 கோடி காணிக்கை செலுத்தினர்.
இன்று காலை நிலவரப்படி பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்க வைக்கப்படாமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 8 மணிக்கு பிறகு பக்தர்கள் வருகை அதிகரித்ததால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

2 முறை கருட சேவை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த மாதம் 2 முறை கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளது. அதாவது வரும் 9ம்தேதி கருடபஞ்சமியன்றும் 19ம்தேதி ஆவணி மாத பவுர்ணமியன்றும் கருட வாகனத்தில் ஏழுமலையான் மாடவீதிகளில் பவனி வர உள்ளார். புதுமணத் தம்பதியினர் ‘கருடபஞ்சமி’ பூஜை செய்தால் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதோடு, கருடனைப் போல வலிமையான மற்றும் நல்ல ஆளுமையுடன் இருக்கும் குழந்தை பிறக்கும் என்று ஐதீகம்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள் தரிசனம் குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம்: பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Tirupathi Eumamalaiaan Temple ,Thirumalai ,Devastanam ,Tirupathi Elumalayan Temple ,Tirupathi Eumalayan Temple ,Devastan ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வாங்க ஆதார் கட்டாயம்!