×
Saravana Stores

சிவகங்கை மாவட்ட காங்கிரசார் போர்க்கொடி; கட்சிக்கு எதிராக செயல்படும் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை: செல்வப்பெருந்தகையிடம் நேரில் புகார்; சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு

சென்னை: கட்சிக்கு எதிராக செயல்படும் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகையிடம் சிவகங்கை மாவட்ட காங்கிரசார் நேரில் புகார் அளித்தனர். இதனால் சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறும் கருத்துகள் சில சர்ச்சை ஏற்படுத்துவாக இருந்து வருகிறது. சில நேரம் அவர் கூறும் கருத்துக்கள் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக இருந்து வருகிறது. இதனால் அவருக்கு எதிராக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் கருத்து தெரிவிப்பது, அதனடிப்படையில் கோஷ்டி பூசல் எழுவதும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், கார்த்தி சிதம்பரம் பேசும்போது, “கூட்டணியின் காரணமாக காங்கிரசார் மக்கள் பிரச்னைகளை பற்றி பேசுவதில்லை. மக்கள் பிரச்னைகளை பேசினால்தான் கட்சி வளரும். கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டும்தான்’ என்றார். அவரது பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பதிலடி கொடுத்து பேசியதும், தொடர்ந்து அவர்களுக்கு இடையே எழுந்த வார்த்தை போர்களும் காங்கிரசில் மீண்டும் கோஷ்டி பூசலை உருவாக்குவதாக அமைந்தது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட காங்கிரசில் கார்த்தி சிதம்பரம் ஒருதரப்பாகவும், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த கோஷ்டி பூசல் காரணமாக, ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், கார்த்தி சிதம்பரத்திற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க கூடாது என்று டெல்லி சென்று மேலிட தலைவர்களிடம் மனு கொடுத்தார்கள். அப்போது, ப.சிதம்பரத்தின் செல்வாக்கு காரணமாக கார்த்தி சிதம்பரத்திற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

தற்போது, மீண்டும் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காங்கிரசார் போர்க்கொடி தூக்கி இருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கே.ஆர்.ராமசாமி தலைமையில் அந்த மாவட்டத்தை சேர்ந்த காங்கிரசார் 200 பேர், சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை திரண்டனர். அவர்களை கூட்ட அரங்கில் அமருமாறும் நேரில் பேசி கொள்ளலாம் என்றும் மூத்த நிர்வாகிகள் அறிவுறுத்தினார்கள். அதன்பேரில், கூட்ட அரங்கில் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் பேசுவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை வந்தார். அப்போது, கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை வேண்டும் என கோஷம் எழுப்பினர். பின்னர் செல்வப்பெருந்தகையிடம் மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில், “கார்த்தி சிதம்பரமும் அவரது ஆதரவாளரான மாவட்ட தலைவரும் இணைந்து கூட்டம் நடத்தினார்கள். அதற்கு முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட நிர்வாகிகள் யாரையும் அழைக்கவில்லை. அப்படிப்பட்ட கூட்டத்தில் மாநில தலைவரான நீங்களும் கலந்து கொண்டீர்கள். இது காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை வருத்தமடைய செய்திருக்கிறது.

அந்த கூட்டத்தில் பேசிய கார்த்தி சிதம்பரம், கட்சியை தனது சொத்து போல நினைத்து கூட்டணியை உடைக்கும் வகையில் பேசியிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் அழைப்பு கொடுத்து செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். அதில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதுபற்றி, கே.ஆர்.ராமசாமியிடம் கேட்டபோது, “கார்த்தி சிதம்பரம் கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க மாநில தலைவரிடம் வலியுறுத்த போகிறோம்’ என்றார். தற்போதைய ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மாநில தலைவர் செல்வப்பெருந்தகையின் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குவோம் என்று சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூறினர்.

The post சிவகங்கை மாவட்ட காங்கிரசார் போர்க்கொடி; கட்சிக்கு எதிராக செயல்படும் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை: செல்வப்பெருந்தகையிடம் நேரில் புகார்; சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sivaganga District Congress Party ,Karthi Chidambaram ,Selvapberundahi ,Sathyamurthi Bhavan ,Chennai ,Sivaganga ,district ,Selvapperundagai ,Satyamoorthy Bhavan ,Karti Chidambaram ,Selvapperundahi ,Shyamoorlog ,
× RELATED கலெக்டர் எச்சரிக்கை அறந்தாங்கி அருகே...