உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானாது. இதில் 11 பேர் படுகாயம் அடைந்தனர். மழை பெய்ததால் மீட்பு பணியின்போது சிரமம் ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள சாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த 55 பேர் ஒரு தனியார் சுற்றுலா பேருந்தில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுக்க நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை சென்றனர்.
அங்கு முன்னோர்களுக்கு திதி கொடுத்துவிட்டு மீண்டும் அதே பேருந்தில் உத்திரமேரூர் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஷேக்உசேன்பேட்டை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. மேலும் அங்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்ததால் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதாமல் இருப்பதற்காக சுற்றுலா பேருந்து டிரைவர் திடீர் பிரேக் போட்டு, பின்னர் திருப்பும் பொழுது எதிர்பாராத விதமாக பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் 11 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்து விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மழை பெய்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் மாற்று வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து எடைக்கல் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 11 பேர் படுகாயம் appeared first on Dinakaran.