×
Saravana Stores

ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த மக்கள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் கடலில் புனித நீராடி, தர்ப்பணம், திதி கொடுத்தும் வழிபட்டனர். கிராமகோயில்களில் சிறப்பு வழிபாடும் நடந்தது.ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டிணம் நவபாஷான தீர்த்தம், திருப்புல்லாணி சேதுக்கரை, சாயல்குடி மாரியூர் ஆகிய தீர்த்தக் கடலில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தல் உள்ளிட்ட சடங்குகளை செய்து சாமி வழிபாடு செய்தனர்.

இதற்காக நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை உள்மாவட்டத்தின் அனைத்து பகுதிகள், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் அதிகாலையில் கடல்களில் புனித தீர்த்தமாடினர்.

தேவிப்பட்டிணம் கடற்கரையில் உள்ள நவபாஷான தீர்த்தம், ராமர் தீர்த்தம் ஆகியவற்றில் மூழ்கி தீர்த்தமாடி அங்குள்ள கடலடைத்த பெருமாள் கோயிலில் வழிபாடு செய்தனர். திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில் நீராடி, கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து வழிபட்டனர். பிறகு அங்குள்ள சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர், திருப்புல்லானி பத்மாஷினி தாயார் உடனுறை ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

சாயல்குடி அருகே மாரியூர் கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்து, அங்குள்ள பவளநிற வள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர் கோயிலில் தரிசனம் செய்தும், முன்னோர்களுக்கு மோட்ச தீபங்கள் ஏற்றியும் வழிபாடு செய்தனர். புனித கடற்கரைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுபோன்று ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம், சேதுக்கரை மற்றும் தேவிப்பட்டிணத்திற்கும், முதுகுளத்தூரில் இருந்து மாரியூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் கிராமபுற கோயில்களில் அமாவாசை விஷேச பூஜைகள், வழிபாடு நடந்தது.

திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் மற்றும் வராஹி அம்மன் கோயில், ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர், முகவை ஊரணி விசாலாட்சி உடனுரை காசி விஸ்வநாதர் கோயில், நயினார்கோயில் சவுந்தரநாயகி அம்மன் உடனுரை நாகநாதர், அபிராமம் அருகே உள்ள அ.தரைக்குடி புஷ்பனேஸ்வரி உடனுரை தரணீஸ்வரர், சாயல்குடி மீனாட்சி அம்மன் உடனுரை கைலாசநாதர், ஆப்பனூர் குழாம்பிகை உடனுரை திருஆப்பநாதர், டி.எம்.கோட்டை கருணாகடாச்சி அம்மன் உடனுரை செஞ்சிடைநாதர், மேலக்கடலாடி அருகே உள்ள நித்தியகல்யாணி உடனுரை வில்வநாதர், மங்களம் ரேணுகாம்பாள் உடனுரை ஆதிசிவன் சோமேஸ்வரர் ஆகிய கோயில்களில் விஷேச பூஜைகள் நடந்தது.

மேலும் ஏனாதி பூங்குளத்து அய்யனார், மாடன், ஆப்பனூர் அரியநாயகிஅம்மன், கடலாடி பாதாள காளியம்மன், ராஜராஜேஸ்வரி அம்மன், சமத்துவபுரம் வனப்பேச்சியம்மன், ராக்கச்சி அம்மன். காணிக்கூர் பாதாள காளியம்மன் உள்ளிட்ட மாவட்டத்திலுளள் கிராம கோயில்களில் பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கடலில் ஏராளமானோர் நீராடி சர்வ தீர்த்ததில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். கடற்கரை சுத்தம் செய்யப்பட்டு சர்வ தீர்த்தேஸ்வரர் ஆலயம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை முதலே ஏராளமானோர் வந்தனர்.

பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மண்டபம் பேரூராட்சி கடற்கரை பூங்கா, பாம்பன் சாலை நுழைவு பகுதியில் தென்கடலில் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் நிழலுக்காக சவுக்கு மரங்களும், சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு திடலும் மற்றும் கடலில் சுற்றுலாபயணிகள் குளிக்கும் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. தென்கடல் அருகே பறந்த நிலப்பரப்பில் ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் பகுதியில் இருந்து பாம்பன் சாலைப் பாலத்திற்கு நுழைவுப் பகுதியில் அமைந்து இருப்பதால் இந்த பகுதியில் வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளை கண்ண கவரும் அளவிற்கு பூங்கா அமைந்துள்ளது.

இதனால் நேற்று ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்கு ஆடி அமாவாசை ஒட்டி அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு வாகனத்தில் செல்லும்போது 200க்கும் மேற்பட்ட வாகனத்தில் பக்தர்கள் இந்த பூங்காவிற்கு வந்து குவிந்தனர். அங்கு பறந்த கடல் பறப்பை பார்த்ததும் ஆனந்தத்தில் குளித்து பொழுது போக்கினார்கள். இதனால் கடற்கரைப் பூங்கா பெரிய திருவிழா கூட்டம் போல் நேற்று காட்சியளித்தது.

The post ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த மக்கள் appeared first on Dinakaran.

Tags : Aadi Amavasi ,Ramanathapuram ,Aadi Amavasai ,Ramanathapuram district ,Devipattinam ,Navabasana Theertha ,Tirupullani Sethukarai ,Sayalkudi Mariyur ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டத்தில் முளைத்த பயிர்கள் தண்ணீரின்றி கருகும் பரிதாபம்