*5 மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரே நாளில் சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் வரிசையில் 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வார இறுதி நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற வெளி மாநில பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சனி, ஞாயிறு முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதன்படி, நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. பின்னர், அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலையில் இருந்தே பொது தரிசன வரிசை மற்றும் ₹50 கட்டண தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியது. சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக தரிசன வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மாலை 4 மணிக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் படிப்படியாக குறைந்தது. அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு முன்னுரிமை தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது. அதனால், பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், அண்ணாமலையார் கோயிலில் நேற்று ஒரே நாளில் சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் செய்த பக்தர்களுக்கு, நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தின் கீழ் நேற்று லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஆடிப்பூர பிரமோற்சவ விழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையொட்டி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் உற்சவத்தின் 7ம் நாளான நேற்று அலங்கார ரூபத்தில் பராசக்தி அம்மன் வீதியுலா நடைபெற்றது. காலை மற்றும் இரவு நேரங்களில் மாட வீதியில் அம்மன் வலம் வந்து அருள்பாலித்தார்.விழாவின் நிறைவாக. நாளை மறுதினம் (7ம் தேதி) அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெற உள்ளது.
The post விடுமுறை தினமான நேற்று கூட்டம் அலைமோதல் அண்ணாமலையார் கோயிலில் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.