×

தம்பதியர் ஒற்றுமையை காக்கும் நாமம்

சென்ற இதழ் தொடர்ச்சி

ஸ்வாதீன வல்லபா

இந்த நாமத்தில் வெளிப்படையாக காண்பித்துக் கொடுப்பது என்னவெனில், சிவ சொரூபமானது ஞான மயமாக எந்தவிதமான செயல்பாடுக்கும் உட்படாமல் இருப்பதால் இங்கு செயல்படுவது எதுவெனில் கருணைதான். நாம் ஒரு சாதகனுடைய நிலையிலிருந்து பார்க்கும்போது எப்படியிருக்கிறது எனில், இந்தக் கருணையினுடைய செயல்பாடுதான். அம்பாளினுடைய செயல்பாடுதான் எப்போதுமே பிரதானமாக தெரியும். ஸ்வாதீன வல்லபா என்று அம்பாளை தனக்கு கட்டுப்பட்ட வல்லபரை உடையவள்… தனக்கு கட்டுப்பட்ட சுவாமி அதாவது கணவரை (பர்த்தாவை) உடையவள் என்று அம்பாளை சொல்கிறோம். அப்போது நாம் கேட்கலாம். சுவாமிதான் அம்பாளுக்கு கட்டுப்பட்டவர் என்றுதானே சஹஸ்ரநாமம் சொல்கிறது. அம்பாள் சுவாமிக்கு கட்டுப்பட்டவர் என்று ஏன் சொல்லவில்லை என்றால், அது நாம் சூட்சுமமாக உணர வேண்டியது. எப்படி ஒரு குழந்தைக்கு முதலில் தாய்தான் தெரியுமோ, அதுபோல ஒரு சாதகனுக்கு கருணை எங்கு வெளிப்படுமோ அங்கு அம்பாள்தான் முதலில் தெரியும். அப்புறம்தான் அவன் உள்ளே சென்று பார்க்கும்போது அம்பாள் எனும் கருணை, ஞானம் எனும் சுவாமிக்கு கட்டுப்பட்டிருக்கிறாள் என்று தெரியவரும். இது அனன்ய தத்துவம் என்பது உள்ளேபோய் பார்க்கும்போதுதான் தெரியும்.

ஆனால், அவனுக்கு முதலில் தரிசனமாவது எதுவெனில் கருணைதான் முதலில் தரிசனமாகும். அதனால்தான் ஞானிகள் நம்மைப் பார்த்து அடிக்கடி எல்லோரிடமும் அன்பாக இருங்கள். கருணையோடு இருங்கள் என்று சொல்கிறார்கள். ஏனெனில், கருணை மிகமிக மேலே இருக்கக்கூடிய விஷயம். நீங்கள் அஞ்ஞானத்தில் இருந்தாலும் சரிதான், கொஞ்சம் பிரியம் வைத்துப்பாருங்கள். அங்கு ஒரு கருணை சுரப்பதை உணர்வீர்கள். அந்தக் கருணையை மெல்ல மெல்ல பெரிதாகும்போது ஒருவர் இருவர் என்றிருந்த கருணை பிரமாண்டம் எடுக்கின்றது. அன்பும் கருணையும் எப்படியெனில், உங்கள் வீட்டுக் கிணற்றில் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் நீரைப் போன்றது. அதாவது அம்பாள் உங்கள் சாதாரண மேல் மனதில்கூட கருணையோடு அமர்ந்திருக்கிறாள் என்று அர்த்தம். அதை பெருகச் செய்யும்போது அப்படி உள்ளே துளைத்துக் கொண்டு ஞான ஊற்றாகப் பொங்குகின்றது. இதோ கருணையை தாயின் முகத்தில் நீங்கள் பார்க்கவில்லையா… நமக்கு பிடித்தவர்களின் சந்திப்பில் உணருவதில்லையா… இதிலெல்லாமும் அம்பாளின் அந்த பிரமாண்டமான கருணை மின்மினிப் பூச்சிபோல் மின்னுகின்றன. ஆனால், நம்முடைய சாதாரண மனிதனில் இந்தக் கருணையை உணராமல், அன்பை புரிந்துகொள்ளாமல் அப்படியே ஆதிக்கமாக மாற்றிக்கொள்கிறோம்.

ஏனெனில், இந்த உணர்வை தவறாக ஈகோ புரிந்து கொண்டு அங்கு பிரச்னையை மனம்தான் கொண்டு வருகின்றது. இல்லையெனில் அன்பும் கருணையும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கும்போது அது தன்னியல்பாக ஞானம் என்கிற சிவத்திடம் நம்மை கொண்டு செல்லும். இது அன்றாடம் நாம் பார்க்கும்… கண்முன்னே உள்ள ஒரு விஷயமாகும். ஸ்வாதீன வல்லபா என்று பார்க்கும்போது ஞானம் கருணைக்கு கட்டுப்பட்டிருக்கிறது என்பதுதான் தெரியும். அதனால்தான் என்னவோ ஸ்ரீ வைஷ்ணவத்தில் பராசரபட்டர் ரங்கநாயகி தாயார் சந்நதியில்தான் இருந்தார். சைவத்தில் உமாபதி சிவாச்சார்யார் நடராஜருக்கு பூஜை செய்யக்கூடிய அந்தநாள் தவிர, மற்ற சிவகாமி அம்பாள் சந்நதியில் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு பூஜை செய்தும், அதை தியானம் செய்தபடியும் இருந்தார். சிவகாமி அம்மையிடம்தான் இருந்தார். இந்த விஷயத்தின் வெளிப்பாடுதான் அம்மா. தாய் என்பதின் வெளிப்பாடே அம்பாள்தான். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் தாய் என்பவளாக வெளிப்படு பவள் அம்பாளே. கருணை வழியேதான் ஞானம் வெளிப்படும். கருணை செயல் படத் தொடங்கினாலே போதும். அங்கு ஞானம் வெகுதூரமில்லை. பராசரபட்டர் என்ன எப்போது பார்த்தாலும் தாயார் சந்நதியிலே இருக்கிறார் என்று பெருமாளே கொஞ்சம் அதிர்ந்தாராம்.

நம்முடைய சந்நதிக்கு இவர் வரவே மாட்டாரா… என்று நினைப்பாராம். அதனால் பெருமாள் ஒருமுறை நாச்சியார் திருக்கோலத்தில் சென்று, பராசரபட்டருக்கு காட்சி கொடுத்தாராம். தாயார்தான் வந்திருக்கிறார் என்று பராசரபட்டர் சந்தோஷப்படுவார் என்று நினைத்து காட்சி கொடுத்தார். பராசரபட்டர் மேலிருந்து கீழ்வரை பார்த்துவிட்டு, ‘‘என்ன சுவாமி… என்னை வசப்படுத்தலாம் என்று வேஷம் போட்டு வந்திருக்கிறீர்களா’’ என்று கேட்டாராம். இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. மாயா லீலை செய்து யார்யாரையோ வசப்படுத்தியிருக்கிறேன். இவர் எப்படி என்னை கண்டுபிடித்தார் என்று பார்த்தால், ‘‘பெருமாளே… வேஷமெல்லாம் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. உங்களைப்போன்று யாராலும் வேஷம் போடமுடியாது. கேசாதி பாதாந்தமெல்லாம் பார்த்தேன். கடைசியாக உங்கள் கண்களை பார்த்தேன். முடிந்து விட்டது. எங்கள் தாயார் கண்களில் இருக்கும் கருணை உங்களிடம் இல்லை. நான் ஏமார்ந்திருப்பேன். கடைசியாக உங்கள் கண்களை பார்த்தேன். உங்கள் கண்களில் நியாயம், ஞானம் எல்லாம் இருக்கிறது. ஆனால், தாயார் கண்களில் வெறும் கருணை மட்டும்தான் இருக்கிறது’’ என்று சொல்லி விட்டாராம். ஸ்வாதீனம் என்பது இங்கு தன்னிலையில் இருப்பது.

ஒரு உதாரணமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களை சித்த ஸ்வாதீனம் இல்லாதவர்கள் என்று சொல்வார்கள். அந்தநிலை அங்கு மாறிப் போயிற்று. Mental disorder என்று ஆங்கிலத்தில் சொல்வோம். ஸ்வாதீனம் என்பது ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்லுகின்ற order. Perception brings order. அந்த ஞானமும் கருணையுமே இங்கு orderஐ கொண்டு வருகின்றது. ஏனெனில், இந்த வல்லபம் என்பதே அந்த ஸ்வாதீனத்தின் தன்மையாகும். மனம் கூட தன்னிலையில் இருந்தால் அது மெல்ல ஒடுங்கி ஆத்ம ஸ்தானத்திற்குச் செல்லும். எனவேதான், உண்மையில் நாமும் ஒருவிதத்தில் சித்த ஸ்வாதீனம் அற்றவர்கள்தான். அவ்வப்போது கலங்குவதை உணருகிறோம் அல்லவா. அதுவே இங்கு dis orderதான்.இந்த வல்லபம் என்கிற ஆற்றலிலிருந்துதான் எல்லாமும் தொடங்குகிறது என்று பார்த்தோம் அல்லவா… அதனால்தான் எல்லாமே தொடங்கக்கூடிய நிலை. யோக மார்க்கத்தில் எல்லாமே தொடங்குவது. மூலாதார ஸ்தானம். மூலாதாரத்தில் யார் இருக்கிறார் எனில், கணபதி. கணபதிக்கு யார் சக்தியெனில் அவளே வல்லபாம்பாள். தத்தாத்ரேயர் கலியில் முதல் அவதாரம் எடுக்கிறார். அவர் அப்படி முதல் அவதாரம் எடுக்கும்போது அவருக்கு பெயர் என்னவெனில், ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் என்று பெயர்.

ஸ்ரீபாதம் என்பது எல்லா ஞானிகளும் தேவர்களும் தொழக்கூடிய திருவடி. திருவடி என்பதை சமஸ்கிருதத்தில் சொன்னால் அதுவே ஸ்ரீபாதம் என்றாகும். தன்னுடைய திருவடியால் எல்லாவற்றையும் செய்யக்கூடிய ஆற்றல் உடையவர் யாரோ அவரே ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர். இங்கு குருவினுடைய திருவடி. ஆச்சார்யனுடைய திருவடி என்னவெனில், குருவினுடைய வலது பாதம் சிவ சொரூபம். குருவினுடைய இடதுபாதம் சக்தி சொரூபம். அப்போது இது இரண்டும் குரு தத்துவத்தில் குரு பாதுகையில் இந்த சிவசக்தி தத்துவம் சொல்லப்படுகின்றது. அதனால்தான் ஸ்ரீசக்ரத்திற்கு பூஜையை எப்படிச் செய்ய வேண்டுமோ அதே முறைப்படி ஸ்ரீசக்ரமோ அல்லது மகாமேருவோ இல்லாமல் குரு பாதுகையை வைத்துக் கொண்டே நாம் இந்த பூஜையை செய்யலாம். ஸ்ரீ வித்யா சம்பிரதாயத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது. ஏனெனில், குரு பாதுகை என்பது பிரத்யட்ச ஸ்ரீசக்ரம். குரு பாதுகை சிவசக்தி ஐக்கிய சொரூபம். ஆதிசங்கரர் தன்னுடைய இரண்டு பிரதானமான ஸ்லோகங்களை எடுத்துக்கொண்டால், சக்தி சொரூபத்திற்கு சௌந்தரிய லஹரி. சிவானந்தத்திற்கு செய்தது சிவானந்த லஹரி. இந்த இரண்டிலுமே சிவசக்தியினுடைய அனன்ய பாவத்தையே சொல்கிறார். சௌந்தர்ய லஹரியின் முதல் ஸ்லோகம் சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும் … என்றும், அம்பாளுக்கும் சுவாமிக்கும் உள்ள அனன்ய பாவம் வெளிப்படுவதை கூறுகிறார்.

சிவானந்த லஹரியில் முதல் ஸ்லோகம், கலாப்யாம் சூடாலங்க்ருத சசிகலாப்யாம் நிஜதப என்று, அம்பாளுடைய தபசினால் சுவாமி வந்தாரா… சுவாமியினுடைய தபசால் அம்பாள் சுவாமிக்கு கிடைத்தாரா என்று முதல் ஸ்லோகம் சொல்லப்பட்டிருக்கிறது.சென்ற இரண்டு நாமங்களோடு இந்த நாமத்திற்கும் சேர்த்து கொஞ்சம் சூட்சுமமாக ஒரு விஷயத்தைப் பார்ப்போம் வாருங்கள். சிவகாமேஸ்வர அங்கஸ்தா… சிவா… ஸ்வாதீனவல்லபா… என்கிற மூன்று நாமங்களும் ஒரு சாதகனுக்குள் என்ன மாதிரியான பலனை ஏற்படுத்துகிறது என்பதே மிகமிக முக்கியமானதாகும். ஒரு சாதகனுக்குள் எந்த மாதிரியான ஒரு வேலை பார்க்கும். சிவகாமேஸ்வர அங்கஸ்தா என்று சொல்லும்போது ரூப சாமரஸ்யம் பார்த்தோம் அல்லவா… அந்த ரூப சாமரஸ்யத்தை அவன் தியானம் செய்யும்போது சரீர சம்மந்தமான வாசனைகள் சுத்தியாகின்றது. அதாவது சுத்தமாக அழிந்து போகின்றன. இனி இந்த சரீரத்தை நோக்கி மனமானது இதை அனுபவி… அதை அனுபவி… என்று சொல்லாமல் தன்னியல்பாக அப்படியே இருக்கும். சரீரம் சரீரமாக இருக்கும். அதாவது இந்த உலகம் அப்படியே இருக்கும். பிரபஞ்சத்தில் இருக்கும் எதுவுமே அவனை இனி சலனப்படுத்தாது. இதுதான் இங்கு முக்கியமானது. வெளியே உள்ள வஸ்துக்களிடம் அவன் மயங்க மாட்டான்.

ஏனெனில், அவையாவும் ஜடம் என்று தெளிவு பெற்றுவிடுவான். இதுநாள் வரையில் வெளியுலகத்தையே சரீரத்தை உபயோகப்படுத்தி ஓடிக்கொண்டிருக்க எந்த வாசனை தூண்டப்பட்டதோ எந்த வாசனை அங்கு செயல்பட்டதோ அது சுத்தமாக இருக்காது. சிவா… என்கிற நாம சாமரஸ்யம் இருக்கிறதல்லவா… அந்த நாம சாமரஸ்யத்தை தியானம் செய்யும்போது அவனுக்கு என்ன நடக்கிறதெனில் வாக் சம்மந்தமான வாசனைகள் சுத்தியாகின்றன. அதாவது எண்ணங்கள் இல்லாது போகின்றன. இன்னும் சொல்லப் போனால் நாம ரூப பிரபஞ்சமான மாயை தோற்றம் மெல்ல விலகத் தொடங்குகின்றன. மூன்றாவது ஸ்வாதீன வல்லபா என்கிற நாமத்தை சொல்லும்போது அங்கு கருணையும் ஞானமும் ஒன்றுக்கொன்று சாமரஸ்யம் கொண்டிருப்பதால் மனம் சம்மந்தமான ஏன், மனமே இல்லாமல் போய்விடுகின்றது. சொரூபம் மட்டுமே சின்மாத்திரமாக சித்சொரூபமாக விளங்குகின்றது. அதிகார சாமரஸ்யத்தால் மனோ வாசனா சுத்தியும் நடக்கிறது. மனதின் ஜென்ம ஜென்மமான மேலே சொன்ன வாசனைகளை இந்த மூன்று நாமங்களும் அழித்துப் போடுகின்றன. எண்ணங்கள் அற்ற நிலையில் நம் அகங்காரம் செயல்படாமல் உண்மையான அந்த சத்திய வஸ்துவாக இருக்கக் கூடிய சிவசக்தி சொரூபமே உங்களிடத்தில் செயல்படத் தொடங்குகின்றன.

எப்போது எண்ணங்கள் நிற்குமெனில் அம்பாள் உள்ளே நுழையும்போது எண்ணங்கள் ஓடிவிடுமல்லவா. அம்பாள் ஹிதமாக கருணையாக நுழைகிறாள். அதனால்தான், சேஷாத்ரி சுவாமிகளின் சரிதத்தில் சுவாமிகளின் தாத்தாவின் கனவில் காமாட்சி அம்மன் சென்று நவநீதம் கொடு. ஞானக் கலை உதிக்கும் என்றாள். இங்கு கல்லாய் இருக்கும் மனதை உருக்கி வெண்ணெயாக்கி அவளிடம் கொடுக்க வேண்டும் அவ்வளவே. ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் வரதராஜர் கோயிலில் தாயாரும் பெருமாளும் வந்தால் தாயார்தான் முன்னால் போவாள். பெருமாள் பின்னால்தான் செல்வார். சிவன் கோயில்களில் பள்ளியறை பூஜை நடக்கிறதல்லவா… இந்த பள்ளியறை என்பது அம்பாள் சந்நதிக்குள்தான் இருக்கும். சுவாமி புறப்பட்டு தன்னுடைய சந்நதியிலிருந்து அம்பாள் சந்நதிக்குள்தான் செல்வார். எல்லா ஊரிலிருக்கும் பள்ளியறை சிவனுக்கு பெயரே சொக்கநாதர் என்றுதான் பெயர். மதுரையில் மட்டுமல்ல. எல்லா ஊரிலிருக்கும் பள்ளியறை மூர்த்திக்கும் அதுதான் பெயர். இப்படி ஸ்வாதீன வல்லபா என்று முன்னால் தாயாரும் பின்னால் பெருமாளும் வருகிறார்களோ, சிவன் கோயில்களில் அம்பாளுடைய இடத்திற்கு சுவாமி பள்ளியறைக்கு வருகிறார்களோ அதுபோல காருண்யத்திற்குத்தான் ஞானம் கட்டுப்படும் என்பதே இந்த நாமத்தின் மையப் பொருளாகும். இதை கோயில்களில் நடக்கும் சம்பிரதாயங்களே அழகாக காண்பித்துக் கொடுப்பதை பாருங்கள். இந்த நாமத்திற்கான கோயிலாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரைச் சொல்லலாம். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மூலவர் அர்த்தநாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள். செங்கோட்டு வேலவர் என முருகனுக்கு தனி சந்நதி அமைந்துள்ளது. இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது.(சுழலும்)

ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா

The post தம்பதியர் ஒற்றுமையை காக்கும் நாமம் appeared first on Dinakaran.

Tags : Swadeena Vallabha ,Shiva ,Jnana Maya ,
× RELATED நாகப்பட்டினம் அருகே கோயில் குளத்தில் சனீஸ்வரர் சிலை கண்டெடுப்பு