ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் உள்ள அபாயகரமான மரங்கள் அகற்றும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யும். மேலும், பல்வேறு பகுதிகளில் உள்ள மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. சில சமயங்களில் குடியிருப்புக்களுக்கு அருகேயுள்ள மரங்களும் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.
எனவே, சாலையோரங்கள் மற்றும் குடியிருப்புகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ளஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையின் போது, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்களில் இருந்த மரங்கள் விழுந்தன. இதில், வாகனங்கள் மற்றும் மின் கம்பங்கள் ஆகியவை சேதம் அடைந்தன.
ஊட்டி தாவரவியல் பூங்கா செல்லும் சாலையோரத்தில் இளைஞர் விடுதி வளாகம் அருகே ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பூங்கா செல்லும் சாலையில், இளைஞர் விடுதி அருகே சாலையோரங்களில் இருந்த ஆபத்தான மரங்களை தற்போது வெட்டி அகற்றும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
The post பூங்கா செல்லும் சாலையில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்றும் பணி துவக்கம் appeared first on Dinakaran.