×

வயநாடு பேரழிவை சந்தித்த பின்பும் தேசிய பேரிடராக அறிவிக்காமல் இழுத்தடிப்பு: ஒன்றிய அரசின் மெத்தனத்துக்கு கேரளா கண்டனம்; நிலச்சரிவில் சிக்கிய 300 பேரின் கதி என்ன?

திருவனந்தபுரம்: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350ஐ தாண்டி பேரழிவை சந்தித்த பின்னும், இதனை தேசிய பேரிடராக அறிவிக்காமல் ஒன்றிய அரசு இழுத்தடித்து வருவதாக கேரள அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி மாயமான மேலும் 300 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு 3 கிராமங்களை அடியோடு அழித்து விட்டது. வீடுகள் இருந்த பகுதிகளில் இப்போது காட்டாற்று வௌ்ளம் ஓடி கொண்டிருக்கிறது.

நிலச்சரிவில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 350ஐ தாண்டி விட்டது. இன்னும் 300க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று கூறப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது. இந்நிலையில் நேற்று 5வது நாளாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவம், பிராந்திய ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் உள்பட மாயமானவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்தப் பகுதி முழுவதும் இரண்டு அடிக்கு மேல் சகதி நிறைந்து காணப்படுவதால் மீட்புப் படையினர் மிகவும் சிரமத்துடன்தான் உடல்களை தேடி வருகின்றனர். சகதிக்குள் உடல்கள் புதைந்து கிடக்கிறதா என்பதை கண்டறிய தெர்மல் ஸ்கேனர், ரேடார் உள்பட நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

நேற்று முன்தினம் மாலை முண்டக்கை பகுதியில் ஒரு இடத்தில் ரேடார் மூலம் பரிசோதித்தபோது அங்கு உடல் கிடக்கலாம் என்பதற்கான சமிக்ஞை கிடைத்தது. உடனடியாக அந்த இடத்தில் மீட்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.நீண்ட நேரம் தேடியும் உடல் எதுவும் கிடைக்கவில்லை. அதற்குள் இருட்டி விட்டதால் அங்கிருந்து திரும்ப மீட்புப் படையினர் தீர்மானித்தனர். ஆனால் உடலை தேடும் பணியை கைவிட வேண்டாம் என்று அரசு தரப்பிலிருந்து மீட்புப் படையினருக்கு தகவல் சென்றது. இதையடுத்து இரவிலும் அவசர விளக்குகளை பயன்படுத்தி மீட்புப் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு உடல்கள் எதுவும் இல்லை என தெரிய வந்ததை தொடர்ந்து இரவு 9 மணியளவில் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

நேற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டன. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 35 கிமீ தொலைவிலுள்ள சாலியார் ஆற்றிலும் நேற்று ஒரு பெண்ணின் உடல் கிடைத்தது. இதையடுத்து சாலியார் ஆற்றிலிருந்து கிடைத்த உடல்களின் எண்ணிக்கை 191ஆக உயர்ந்துள்ளது. அரசுத் தரப்பில் இதுவரை 210 பேர் மட்டுமே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் 84, பெண் 93, குழந்தைகள் 28. 133 உடல் பாகங்களும் கிடைத்துள்ளன. மீட்கப்பட்டதில் 74 உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்த உடல்கள் மேப்பாடி பகுதியிலுள்ள பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் வயநாடு மாவட்டம் முழுவதும் உள்ள 91 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேப்படி பகுதியில் மட்டும் 17 நிவாரண முகாம்களில் 2597 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்டவர்களில் தங்களின் குடும்ப உறவுகள் இருக்கிறார் களா என்று முகாம்களிலும், மருத்துவமனைகளிலும் பலர் தேடி அலையும் காட்சி காண்போரை கண் கலங்க வைக்கிறது. இத்தகைய வரலாறு காணாத பேரழிவு நடந்துள்ள போதிலும், இதனை தேசிய பேரிடராக ஒன்றிய பாஜ அரசு இதுவரை அறிவிக்கவில்லை.

இது குறித்து, கேரள மாநில வருவாய்த் துறை அமைச்சர் ராஜன் கூறுகையில், ‘‘வயநாட்டில் ஏற்பட்டது ஒரு பேரழிவாகும். ஏராளமானோர் வீடுகளையும், உற்றார், உறவினர்களையும் இழந்துள்ளனர். சமீப காலத்தில் இப்படி ஒரு பேரழிவு நம் நாட்டில் எங்குமே நடந்ததில்லை. எனவே இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கேரளா பலமுறை வலியுறுத்தியுள்ளது. முதல்வர் பினராயி விஜயன், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலரும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இது தொடர்பாக ஒன்றிய அரசு இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இது மிகுந்த வேதனை அளிக்கிறது’’ என கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்வ மத பிரார்த்தனையுடன் அடக்கம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது, “வயநாட்டில் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் இறுதிக்கட்ட மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 215 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 98 ஆண்கள், 87 பெண்கள், 30 குழந்தைகள். 148 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கிய 206 பேரை காணவில்லை. காயமடைந்த 81 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 206 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். வயநாடு மாவட்டத்தில் 93 நிவாரண முகாம்களில் 10,042 பேர் உள்ளனர்.

சூரல்மலையில் 10 முகாம்களில் 1807 பேர் உள்ளனர். 67 உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அடையாளம் காணப்படாத உடல்களை சர்வ மத பிரார்த்தனையுடன் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் பத்திரிகைகளின் சேவை பாராட்டத்தக்கது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் உதவிகள் செய்து வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் 100 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுபோல கர்நாடக அரசும் 100 வீடுகள் கட்டித்தர தீர்மானித்துள்ளது என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

* 25 தமிழர்கள் மாயம்?
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள சூரல் மலை, முண்டக்கை உள்ளிட்ட தனியார் தேயிலை தோட்டங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குடிபெயர்ந்து பல தலை முறைகளாக அங்கு தங்கி பணிபுரிந்து வருபவர்கள். இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் 25 தமிழர்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 5 நாட்களாகியும் அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. இதனால் அவர்களின் உறவினர்கள் சோகத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

* மீட்பு பணியில் 2 ஆயிரம் பேர்
வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 2 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். 264 பேர் நிலச்சரிவில் சிக்கி காயமடைந்துள்ளனர். அவர்களில் முதற்கட்ட சிகிச்சைக்கு பிறகு 58 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

* 3 கிராமங்கள் பேரிடர் பகுதிகளாக அறிவிப்பு
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 3 கிராமங்களை பேரிடர் பாதித்த பகுதிகளாக கேரள அரசு அறிவித்துள்ளது. மேப்பாடி பஞ்சாயத்திலுள்ள கோட்டப்படி, வெள்ளார்மலை ஆகிய கிராமங்களும், வைத்திரி தாலுகாவிலுள்ள திருக்கைகப்பற்றா என்ற கிராமமும் கடந்த ஜூலை 30ம் தேதி முதல் பேரிடர் பாதித்த பகுதிகள் என்று கேரள அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

* நடிகர் மோகன்லால்ரூ.3 கோடி நிதி உதவி
இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக உள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நேற்று சூரல்மலை, முண்டக்கை மற்றும் புஞ்சிரிமட்டம் ஆகிய பகுதிகளுக்கு சென்றார். அப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர் உள்பட அனைவரையும் சந்தித்து அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, “நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இந்த ஊருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. முன்பு எனக்கு இங்கு சொந்தமாக நிலம் இருந்தது. ஏராளமானோர் உற்றார், உறவினர்களை இழந்து வாடுகின்றனர். ராணுவத்தினரும், தீயணைப்பு வீரர்களும் , மீட்புப் படையினரும், உள்ளூர் மக்களும் மேற்கொண்டு வரும் பணிகள் மிகவும் பாராட்டத்தக்கது. நான் அங்கமாக உள்ள மெட்ராஸ் பட்டாலியன் இங்கு சிறப்பான சேவைகளை செய்து வருகிறது. மலைக்கு மேலே சென்று பார்த்தபோதுதான் இந்த நிலச்சரிவின் பாதிப்புகள் எனக்குத் தெரிய வந்தது. இது நம் நாடு கண்ட மிகப்பெரிய பேரிழப்பு. என் பெற்றோரின் பெயரில் செயல்பட்டு வரும் விஷ்வ சாந்தி அறக்கட்டளை சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாகரூ.3 கோடி வழங்கப்படும். நிலச்சரிவால் உருக்குலைந்த பள்ளியை சீரமைத்து தருவேன்” என்று கூறினார்.

* குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி கோரும் தம்பதி
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏராளமானோர் பல வழிகளில் உதவ முன்வந்துள்ளனர். இடுக்கி மாவட்டம் உப்புதுறையை சேர்ந்த ஒரு பெண், தனக்கு பால் குடிக்கும் ஒரு குழந்தை இருப்பதாகவும், நிலச்சரிவில் தாயை இழந்த குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்கத் தயார் என்றும் கூறினார். இவரைபோல மேலும் பல பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முன்வந்துள்ளனர். இந்நிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த சுதீஷ் என்ற வாலிபர் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு பேஸ்புக் மூலம் விடுத்துள்ள வேண்டுகோளில், “எனக்கு திருமணமாகி விட்டது. ஆனால் எங்களுக்கு குழந்தைகள் இல்லை. வயநாடு நிலச்சரிவால் உறவுகளை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகள் இருந்தால் அவர்களை தத்தெடுத்து வளர்க்க அனுமதிப்பீர்களா?” என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அமைச்சர் வீணா ஜார்ஜ், “பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால் மத்திய சிறுவர் நீதி சட்டம் 2015ன்படி அரசுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே முறையான சட்ட திட்டத்தின் படியே குழந்தைகளை தத்தெடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

* நீர்வீழ்ச்சியில் சிக்கிய வாலிபர்கள்
மலப்புரம் மாவட்டம் நிலம்பூரைச் சேர்ந்த ரஹீஸ், சாலிம், மற்றும் முஹ்சின் ஆகிய 3 வாலிபர்கள் நிலம்பூர் வனப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் இவர்கள் நிலச்சரிவு பாதித்த பகுதிகளுக்கு செல்லும்போது வழியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அதையும் மீறி 3 பேரும் வனப்பகுதிக்குள் சென்றனர். இந்நிலையில் வழியில் சூஜிப்பாறையில் உள்ள 2 நீர்வீழ்ச்சிகளுக்கு இடையே அவர்கள் சிக்கி கொண்டனர்.வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அவர்களால் அதைத் தாண்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இரவு முழுவதும் 3 பேரும் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். இதற்கிடையே நீர்வீழ்ச்சியை கடக்க முயன்றபோது சாலிம், முஹ்சின் இருவருக்கும் காலில் காயம் ஏற்பட்டது.

இந்த வாலிபர்கள் வனப்பகுதிக்குள் சிக்கிக்கொண்ட விவரம் நேற்று மதியம்தான் வனத்துறைக்கு தெரிய வந்தது. உடனடியாக வனத்துறை, போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பல மணி நேர போராட்டத்திற்குப் பின் ரஹீஸ் என்பவரை மட்டும் போலீசார் வடம் கட்டி மறுகரைக்கு கொண்டு வந்தனர். மற்ற இருவரையும் காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் விமானப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விமானப்படையினர் ஹெலிகாப்டருடன் அங்கு விரைந்தனர். நீண்ட நேரத்திற்குப் பின்னர் மிகவும் சாகசமாக இருவரையும் ஹெலிகாப்டர் மூலம் விமானப்படையினர் மீட்டனர்.

* சாலியார் ஆற்றில் 16 உடல்கள் மீட்பு
நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதியிலிருந்து மலப்புரம் மாவட்டத்தில் ஓடும் சாலியார் ஆறு சுமார் 35 கிமீ தொலைவிற்கு மேல் உள்ளது. நேற்று முன்தினம் வரை இந்த ஆற்றிலிருந்து மட்டும் 170க்கும் மேற்பட்ட உடல்கள் கிடைத்தன. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 35 கிமீக்கு மேல் உடல்கள் அடித்துச் செல்லப்பட்டது இதன் பயங்கரத்தையே நமக்கு காட்டுகிறது. ஆற்றில் மேலும் உடல்கள் இருக்கலாம் என்பதால் நேற்று 5வது நாளாக போலீசார், தீயணைப்பு வீரர்கள் உள்பட மீட்புப் படையினர் இங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 16 உடல்களும், உடல் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. உடல்கள் அதிகமாக கிடைத்ததால் இன்று சாலியார் ஆற்றில் கூடுதல் உபகரணங்களை பயன்படுத்தி தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

The post வயநாடு பேரழிவை சந்தித்த பின்பும் தேசிய பேரிடராக அறிவிக்காமல் இழுத்தடிப்பு: ஒன்றிய அரசின் மெத்தனத்துக்கு கேரளா கண்டனம்; நிலச்சரிவில் சிக்கிய 300 பேரின் கதி என்ன? appeared first on Dinakaran.

Tags : Kerala ,EU government ,Wayanadu ,Thiruvananthapuram ,Kerala government ,Wayanad ,Vayanadu ,
× RELATED கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு...