- ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்
- சென்னை
- ஆதிபெர்கு திருவிழா
- ஆடி
- தமிழ்
- ஆடி மாதம்
- ஆடிப்பெரு திருவிழா
- ஆடிப்பெருக்கு விழா கோகலலம்
- தாய் காவிரி
சென்னை: ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நேற்று கொண்டாப்பட்டது. காவிரி தாய்க்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழ் மாதங்களில் ஆடி சிறப்பு வாய்ந்த மாதம். ஆடி மாதம் 18ம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரி நதியை பெண்ணாக, தாயாக பாவித்து வணங்கி போற்றும் விழாவே ஆடிப்பெருக்கு. இந்த நாளில் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்புபூஜைகள் நடைபெறுவது வழக்கம். திருமணமாகாத மற்றும் பெண்கள் மஞ்சள் கயிறு அணிந்து கொள்வர். இந்த விழா காவிரி கரையோரங்களில் விமரிசையாக நடைபெறும்.
அதன்படி நேற்று ஆடிப்பெருக்கு விழா காவிரி டெல்டா மாவட்டங்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு காவிரி, கொள்ளிடம் மற்றும் கிளை ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால் ஆடிப்பெருக்கு விழா களைகட்டியது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் காலை முதல் பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்தனர். காவிரி கரையில் கூடிய மக்கள் புனித நீராடி, புத்தாடைகள் அணிந்து, காவிரி ஆற்றின் படிக்கட்டுகளில் வாழை இலை போட்டு அதில் காப்பரிசி, தேங்காய், பழம், புதிய மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி உள்ளிட்ட பொருட்களை படையலிட்டு தீபம் ஏற்றி காவிரி தாய்க்கு பூஜை செய்து வழிபட்டனர்.
சுமங்கலி பெண்கள் மாங்கல்ய கயிற்றை மாற்றி கட்டிக்கொண்டனர். புதுமண தம்பதிகள் புத்தாடை அணிந்து வந்து காவிரி தாய்க்கு பூஜைகள் நடத்தி, திருமணத்தின் போது அணிந்த மாலைகளை ஆற்றில் விட்டனர். அய்யாளம்மன், சிந்தாமணி ஓடத்துறை உள்ளிட்ட காவிரி ஆற்றின் படித்துறைகளில் ஏராளமான பெண்கள், பொதுமக்கள் உறவினர்களுடன் கூடி வழிபாடு நடத்தினர். புதுப்பெண்களுக்கு தாலியை பிரித்து கட்டும் நிகழ்ச்சியும் காவிரி படித்துறையில் நடந்தது. பின்னர் வாழை மட்டையில் தீபத்தை வைத்து காவிரி ஆற்றில் மிதக்கவிட்டனர். தொடர்ந்து படித்துறை அருகில் உள்ள வேப்பமரம், அரசமரங்களை மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி பெண்கள் சுற்றி வந்தனர்.
இதே போல் தஞ்சாவூர், திருவையாறு, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் காவிரி கரையோரங்கள், படித்துறைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஈரோடு, பவானி கூடுதுறை, கொடுமுடி, அந்தியூர், கோவை பேரூர், திருப்பூர் ஆகிய இடங்களிலும் நீர்நிலைகள் அருகே பக்தர்கள் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடினர். நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையிலும் நேற்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. திருச்செந்தூர் கடலிலும் பக்தர்கள் கூடி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடினர். கடலூரில் தென்பெண்ணை ஆறு மற்றும் கெடிலம் ஆற்றங்கரைகளில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து, தீபமேற்றி வழிபட்டனர். கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிலும் புதுமண தம்பதிகள் தங்கள் அணிந்த மாலைகளை கடலில் விட்டனர்.
* காவிரிக்கு சீர் கொடுக்கும் ரங்கநாதர்
ஆடிப்பெருக்கு அன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காவிரி தாய்க்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி ஆடிப்பெருக்கையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் தங்க பல்லக்கில் அம்மா மண்டபம் புறப்பட்டார். பின்னர் வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11 மணிக்கு அம்மா மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு ரங்கநாதருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை வரை அங்கேயே வீற்றிருந்தார். மாலை 4.45 மணிக்கு காவிரி தாய்க்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சீதன பொருட்களாக பட்டு, தாலிபொட்டு, மஞ்சள் உள்ளிட்ட மங்கல பொருட்கள் காவிரி ஆற்றில் மிதக்க விடப்பட்டது. இரவு 8.30 மணிக்கு ஸ்ரீரங்கம் அம்மா மண்படத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் அடைந்தார்.
* தடையால் வெறிச்சோடிய மேட்டூர்
மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆடிப்பெருக்கின் போது, காவிரியில் பொதுமக்கள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால், நேற்று மேட்டூர் அணைக்கு சாதாரண நாட்களில் வரும் கூட்டத்தை விட, மிக சொற்ப அளவிலேயே மக்கள் வந்திருந்தனர். பொதுமக்கள் நீராடுவதற்கு மேட்டூர் அணையில் மேல்மட்ட மதகிலிருந்து அணைக்கட்டு முனியப்பன் கோயில் வழியாக செல்லும் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இடைப்பாடி அடுத்த பூலாம்பட்டி பில்லுக்குறிச்சி கிழக்கு மேற்கு கால்வாயில், பொதுமக்கள் புனித நீராடினர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் அங்கு குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவிரியில் தண்ணீர் அதிகளவு செல்வதால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள 19 படித்துறைகளிலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் நுழையாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதேபோல் மோகனூர் காவிரியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு வந்த மக்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர். திருச்சி, தஞ்சையிலும் காவிரியில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் படித்துறைகள் இல்லாத இடங்களில் ஆடிப்பெருக்கு கொண்டாட
தடை விதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக அந்த பகுதிகளில் ஆற்றில் யாரும் இறங்காத வகையில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. படித்துறை உள்ள இடங்களில் மட்டும் மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.
The post ஆடிப்பெருக்கு விழா கோலாகலம் ; காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை: புனித நீராடி புத்தாடைகள் அணிந்து கொண்டாட்டம்; புதுமண தம்பதிகள் மாங்கல்ய கயிற்றை மாற்றி வழிபாடு appeared first on Dinakaran.