சென்னை: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
தாம்பரம் கடற்கரை புறநகர் ரயில் ரத்து செய்யப்பட்டதால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து என்ற செய்தியை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுமக்களின் அன்றாட போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இந்த சூழலில் பராமரிப்பு பணிகள் காரணமாக சில மனி நேரங்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு வருகிறது. இது தினசரி பயணத்தை நெருக்கடியாக மாற்றி விடுகிறது.
புறநகர் ரயில் சேவையில் பல்வேறு ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டிருந்தன. பல்லாவரம் – தாம்பரம், தாம்பரம் – கூடுவாஞ்சேரி, கடற்கரை – பார்க் டவுன் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் 55 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்திருந்தது. இதனால் புறநகர் பகுதியில் இருந்து சென்னைக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்த பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனால் மாநகரப் பேருந்துகளை நோக்கி ஒரே சமயத்தில் அதிக அளவில் பயணிகள் படையெடுத்தனர். ரயில் சேவை ரத்தை ஒட்டி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ஜி.எஸ்.டி சாலையில் மட்டும் 50 கூடுதல் பேருந்துகளை மாநகரப் போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்திருந்தது. இதன்மூலம் ஞாயிறு அன்று பேருந்து சேவைகளின் எண்ணிக்கையை 1,300க்கும் மேல் அதிகரித்திருந்தது. பயணிகளின் வருகை அதிகரிப்பை தொடர்ந்து ஷேர் ஆட்டோக்களும் ஜி.எஸ்.டி சாலைக்கு திருப்பி விடப்பட்டிருந்தன.
The post தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.