×

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நீட் வினாத்தாள் கசிவு தடுக்க வேண்டும்: தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தடுக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, “ நீட் மறுதேர்வு நடத்த தேவையில்லை என்று கடந்த மாதம் 23ம் தேதி தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு ஆகியவை தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய ஒரு இறுதி உத்தரவையும், அதேபோன்று நடப்பாண்டு நீட் தேர்வை ஏன் ரத்து செய்யவில்லை என்ற விளக்கத்தையும் தெரிவித்து உள்ளனர்.

அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில், “ நடந்து முடிந்த நீட் தேர்வில் பீகாரின் ஹசாரிபாக் மற்றும் பாட்னாவை தாண்டி விதி மீறல் எதுவும் இல்லை என்ற முடிவுக்கு நீதிமன்றம் வந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஐஐடி டெல்லியின் பதில் சரியானது என்று நாங்கள் கருதுகிறோம். அதனை அடிப்படையாக கொண்டு நடப்பாண்டு நீட் தேர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவில்லை. இதில் பல லட்சம் மாணவர்களின் எதிர்காலமும் அடங்கி உள்ளதை தீவிரமாக ஆராய்ந்தோம். இருப்பினும் நீட் தேர்வு விவகாரத்தில் இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகள் எதிர்காலத்தில் நடக்காமல் தேசிய தேர்வு முகமை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக தேர்வு எழுதிய 44பேர்கள், 720க்கு 720 மதிப்பெண் பெற வழிவகுத்த கருணை மதிப்பெண்கள் போன்ற பிரச்னைகள் மீண்டும் நிகழாத வகையில் இந்த ஆண்டே தேசிய தேர்வு முகமை மற்றும் ஒன்றிய அரசால் அது சரி செய்யப்பட வேண்டும். நீட் தேர்வு நடத்த, தேசிய தேர்வு முகமை மற்றும் ஒன்றிய அரசு அதிகாரிகள் நியமிப்பது, அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழுவை அனுப்புவது, வினாத்தாள்களை தயாரிப்பதில் இருந்து அதைச் சரிபார்ப்பது ஆகியவை உள்பட கடுமையான சோதனைகளை உட்படுத்த வேண்டும்.

மேலும் அதனை உறுதி செய்வதற்கான புதிய நெறிமுறைகளையும் மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று வினாத்தாள் மதிப்பீடு செய்தல், வினாத்தாள்களை கையாளுதல், அதனை சேமித்தல் போன்றவற்றை ஒழுங்குப்படுத்த வேண்டும். ஆள்மாறாட்டத்தை கண்டுபிடிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். எந்தவொரு முறைகேட்டையும் தடுப்பது மற்றும் கண்டறிவதே அதன் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். மேலும் திறந்த நிலையில் இருக்கும் இ ரிக் ஷாக்களைக் காட்டிலும் நவீன மின்னணு பூட்டுகளுடன் கூடிய வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நம்பகத்தன்மை கருத்தில் கொள்ளப்படும்.

மேலும் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டுள்ள குழுவானது ஒரு வலுவான குறை தீர்க்கும் நெறிமுறையை ஏற்படுத்தி அதனை பரிந்துரை செய்ய வேண்டும். இதனால் அனைத்து முக்கிய தகவல்களும் பாதுகாக்கப்படுவது மட்டுமில்லாமல், வினாத்தாள் கசிவுகள் நடைபெறாமல் தடுக்கப்படும். மின்னணு கைரேகைகள், இணைய பாதுகாப்பு ஆகிய தணிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் விவகாரத்திலும் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நிபுணர் குழுவானது மாணவர்களின் மனநல உதவித் திட்டங்களுக்கான கருத்துகளை பரிந்துரைக்க வேண்டும்.

மாணவர்கள் மீதான உளவியல் தாக்கத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். வினாத்தாள் கசிவு போன்றவற்றை தடுக்க சைபர் செக்யூரிட்டி முறைகளில் நவீன தொழில்நுட்பத்துடனான கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். இருப்பினும் தற்போது உச்ச நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை பரிசீலிக்க குழுவுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படலாம். எனவே அந்த குழு செப்டம்பர் 30, 2024க்குள் ஒரு அறிக்கையைத் தயாரித்து அதனை ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை ஒன்றிய கல்வி அமைச்சகம் ஒரு மாதத்தில் செயல்படுத்தும் திட்டத்தை வகுத்து விட்டு, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அதனை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் ஏதேனும் தேவைப்படும் பட்சத்தில் மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களை அணுகி நிவாரணம் கேட்கலாம்” என்று தெரிவித்து, இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.

* வினாத்தாள்களை தயாரிப்பு, கையாளுதல், அதனை சேமித்தல் போன்றவற்றை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
* ஆள்மாறாட்டத்தையும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் உதவியோடு தடுக்க வேண்டும்.
* எந்தவொரு முறைகேட்டையும் தடுப்பது மற்றும் கண்டறிவதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

The post நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நீட் வினாத்தாள் கசிவு தடுக்க வேண்டும்: தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,National Examinations Agency ,New Delhi ,National Examination Agency ,Dinakaran ,
× RELATED காவலில் இருக்கும் குற்றவாளிகள்...