×

இலங்கை கடற்படையை கண்டித்து இன்று முதல் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்: மீட்கப்பட்ட மீனவர்கள், இறந்தவரின் உடல் இன்று ஒப்படைப்பு?

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம், 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றன. இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 10க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்தனர். அப்போது இலங்கை ரோந்து படகு மோதி, ராமேஸ்வரம் மீனவர் கார்த்திகேயன் என்பவரின் படகு மூழ்கடிக்கப்பட்டது.

படகில் இருந்த மீனவர்கள் 4 பேரில், மீனவர் மலைச்சாமி உடலில் பலத்த காயத்துடன் இறந்த நிலையில் நேற்று முன்தினமே சடலமாக மீட்கப்பட்டார். மூக்கையா மற்றும் முத்து முனியாண்டி இருவரும் உயிருடன் மீட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின் நேற்று முன்தினம் இரவு ஊர்க்காவல்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். வழக்குகள் இன்றி விடுவிக்கப்பட்டதால் இருவரையும், இந்திய தூதரக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். மாயமான மீனவர் ராமச்சந்திரனை இலங்கை கடற்படை தொடர்ந்து தேடி வருகிறது. கொலையான மீனவர் மலைச்சாமியின் உடல் இலங்கை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் மூக்கையா, முத்து முனியாண்டி இருவரும், மலைச்சாமி உடலுடன் இன்று இலங்கை – இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலில் மாயமான மீனவர் ராமச்சந்திரன் தற்போது வரை மீட்கப்படாததால் மீனவரின் குடும்பத்தினர் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். மாயமான மீனவரை விரைந்து மீட்டு தரக்கோரி மீனவரின் குடும்பத்தினர் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் ஒட்டுமொத்த ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலவரையற்ற போராட்டம்: நேற்று காலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் மீனவ சங்க செயலாளர் சகாயம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாயமான மீனவரின் உடல் மீட்கப்படும் வரை, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. மேலும் இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் மீன்பிடித் துறைமுகத்தில் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

The post இலங்கை கடற்படையை கண்டித்து இன்று முதல் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்: மீட்கப்பட்ட மீனவர்கள், இறந்தவரின் உடல் இன்று ஒப்படைப்பு? appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Rameswaram ,Sri Lanka Navy ,
× RELATED நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்...