சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் திருக்கோயிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்திட 277 கிலோ வெள்ளிக் கட்டிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: காளிகாம்பாள் திருக்கோயிலுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்தேர் செய்திட 5.11 லட்சம் செலவில் மரத்தேர் உருவாக்குகின்ற பணி நிறைவுபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை தினம் 277 கிலோ கிராம் எடை கொண்ட வெள்ளியை கொண்டு அத்தேருக்கு வெள்ளித் தகடு வேயும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 6 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு வெள்ளித்தேர் வெள்ளோட்டம் விடப்படும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு, 1.922 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு பெற்றிருக்கிறது.
ரூ.6.447 கோடி மதிப்பிலான 6746.97 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை இல்லாத அளவிற்கு பல்வேறு திட்டங்களையும் அதிகளவிலான அரசு மானியங்களையும் வழங்கி வருவதோடு, பழனியில் உலகிலுள்ள முருகப் பக்தர்கள் போற்றும் வகையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தி காட்ட உள்ளார். இவ்வாறு சேகர்பாபு கூறினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் இரா.சுகுமார், இணை ஆணையர்கள் ச. லட்சுமணன், மங்கையர்க்கரசி, ஜ.முல்லை, திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இ.எம்.எஸ். மோகன் மற்றும் அறங்காவலர்கள், திருக்கோயில் துணை ஆணையர் செயல் அலுவலர் இரா. ஹரிஹரன், திருக்கோயில் சிவாச்சாரியார் காளிதாஸ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post காளிகாம்பாள் திருக்கோயிலுக்கு புதிய தேர் 277 கிலோ வெள்ளி கட்டிகள் கொண்டு தகடு வேயும் பணி தொடங்கியது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.