×

PMDD பிரச்னைக்கு தீர்வளிக்கும் அரோமா தெரபி!

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் பூப்படைந்த நாட்கள் முதல் அவர்கள் மெனோபாஸ் அடையும் வரை அவர்கள் உடலில் பல வித ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு ஒரு பட்டியலே இடலாம். அதில் தற்போது புதிதாக இணைந்துள்ளது ப்ரீமென்ஸ்சுரல் டிஸ்போரிக் டிஸார்டர் (PMDD) என்கிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் தீபா.
‘‘PMDD குழந்தை பேறு வயதில் இருக்கும் பெண்களை பாதிக்கும் ஒருவித ஹார்மோன் டிஸார்டர்.

இது நம்மில் பல பெண்கள் அறிந்ததுதான். அதாவது, PMSன் தீவிர நிலை என்று சொல்லலாம். பொதுவாக மாதவிடாயின் பொது ஏற்படும் சில ஹார்மோன் அளவு மாறுபாட்டினால் PMS ஏற்படும். தற்போது அதன் மேம்பட்ட நிலையான PMDDயால் 2-5% பெண்கள் பாதிப்படைகின்றனர். இதிலும் PMSல் காணப்படும் அதே மாதிரியான அறிகுறிகள், பாதிப்புகள் தான் தென்படும்.

PMDD எந்த காரணத்தினால் ஏற்படுகிறது என்று இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. மாதவிடாயின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் ஒரு முக்கிய காரணம் என்று தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது. மாதவிடாயின் போது உடலில் செரோடோனின் அளவு குறையும். இதன் காரணமாக அதிக பசி, மனம் நிலையில்லா தன்மை, உடல் சோர்வு, உடலின் வெப்பநிலை மாறுபட்டுக் கொண்டே இருப்பது போன்ற அறிகுறிகள் PMDD பிரச்னை உள்ளவர்களுக்கு காணப்படும். இதற்கு மேலும் முக்கிய காரணம் நம் வாழ்வியலில் ஏற்படும் மாற்றங்களான உணவுப் பழக்கம், தூக்கமின்மையும் குறிப்பிடலாம். இவை ஒரு பக்கம் இருக்க, பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் மன உளைச்சல், ஏற்கனவே PMS பிரச்னை உள்ளவர்களுக்கும்
PMDD பாதிப்பு ஏற்பட அதிகளவில் வாய்ப்புள்ளது.

முன்பு சொன்னது போலவே PMS, PMDD இரண்டிற்குமே ஒரே மாதிரியான அறிகுறிகள் என்றாலும், நூலிழையில் இரண்டுக்கும் இடையே உள்ள சிறு மாறுபாடுகள்தான் அதனை தீவிர நிலைக்கு கொண்டு செல்கிறது. அந்த மாறுபாடுகள் மனச்சோர்வு, எதிலும் ஈடுபாடு இல்லாத தன்மை, ஒருவர் மேல் நம்பிக்கையின்மை, பதட்டம், திடீர் அழுகை, எரிச்சல், கோபம், பசியின்மை அல்லது அதிக பசி, தூங்குவதில் சிரமம், மார்பக வீக்கம், கனமான உணர்வு, திடீர் எடை அதிகரிப்பு போன்றவையாகும்.

இவை மாதவிடாய் துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தோன்றி மாதவிடாயின் இறுதி நாட்களில் முடிந்துவிடும். இதனை உடல் மற்றும் பெல்விக் பரிசோதனைகள் மூலம்
கண்டறியலாம். பாதிக்கப்பட்டவர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைகளை கடைபிடித்தால், அவர்களின் மன அழுத்தம் குறைந்து, நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும். இவர்கள் காரணமே இன்றி அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி கோபப்படுவார்கள். அதனை தடுக்க அரோமா தெரபி மிகவும் பயன் கொடுக்கும்’’ என்றவர் அரோமா தெரபியால் PMDD பிரச்னைக்கு எவ்வாறு தீர்வு கண்டறியலாம் என்பது குறித்து விளக்கினார்.

‘‘அரோமா தெரபி 6000 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ளது. ஒரு தனி நபரின் உடல் மனநிலைகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. காமோமைல். கிளாரிசேஜ், லாவண்டர், நிரோலி, ரோஸ்மேரி போன்ற எண்ணெய்கள் கொண்டு மசாஜ் செய்வதால், PMDD பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். காமோமைல் எண்ணெய் உடலை ரிலாக்ஸாக்கும், ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

கிளாரிசேஜ் பதட்டத்தை குறைத்து, இறுக்கத்தை நீக்கும். அடி வயிறு மற்றும் இடுப்பு வலியினை கட்டுப்படுத்தலாம். லாவண்டர் ஆயில், மன அழுத்தத்தை குறைக்கும். குறிப்பாக மாதவிடாய் நாட்களில் ஏற்படும் மன உளைச்சலை போக்கவல்லது. நிரோலியை தினசரி பயன்படுத்தி வந்தால் PMDD பிரச்னை நாளடைவில் குறையும். ரோஸ்மேரி மாதவிடாய் மட்டுமில்லாமல் அனைத்து நாட்களிலும் உடலை நல்ல நிலைமையில் வைக்க உதவுகிறது.

இந்த எண்ணெய்களை நேரடியாக உபயோகப்படுத்தக்கூடாது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயில் கலந்துதான் பயன்படுத்த வேண்டும். இதனை மசாஜ், உடலின் மேற்பரப்பு மற்றும் சுவாசிக்க என மூன்று விதமான முறைகளில் பயன்படுத்தலாம். அரோமா எண்ணெய்கள் கொண்டு மசாஜ் செய்வதால் உடல் வலிகளை குறைத்து, உடல் மற்றும் மனம் சார்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும். உடலின் மேற்பரப்பில் பயன்படுத்தும் போது, சருமத்திற்கு புத்துணர்வு அளிக்கும். எண்ணெயின் நறுமணங்களை சுவாசிப்பதால், ரத்தக் கொதிப்பு, சுவாசக் கிருமிகளை நீக்கி, உளவியல் பிரச்னைகளுக்கும் தீர்வு வழங்குகிறது.

அதற்கு சிறு துளி எண்ணெயினை தலையணை, போர்வையில் தெளிக்கலாம். குளிக்கும் தண்ணீரில் கலந்துவிடலாம். அடுத்து மிகவும் முக்கியமானது, உணவுப்பழக்க முறை. துரித உணவுகளில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகம் இருப்பதால், கை, கால் வீக்கம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு ஏற்படும். இது உடல் சோர்வை அதிகரித்து, மன உளைச்சலை ஏற்படுத்தும். இது போன்ற உணவினை அதிகம் உட்கொள்வதால், பல பெண்களுக்கு டிஸ்மெனோரியா என்று சொல்லக்கூடிய மாதவிடாயின் போது ஏற்படும் அசௌகரிய நிலை, அடி வயிறு வலி, இடுப்பு வலி, மாதவிடாய்க்கு முன்பு கால் வலி, தசை பிடிப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்’’ என்றவர் யோகாசனம் மற்றும் உடற்பயிற்சிகளின் அவசியங்களை பகிர்ந்தார்.

‘‘யோகாசனம் மற்றும் உடற்பயிற்சியினை தினசரி மேற்கொண்டால், இதன் மூலம் ஏற்படும் பக்க விளைவுகளை குறைக்கலாம். யோகாசனம் செய்ய நேரமில்லை என்று கூறுபவர்கள் தினசரி நடைப்பயிற்சியினை மேற்கொள்ளலாம். ஆசனங்கள் மற்றும் நடைப்பயிற்சியினை விடியற்காலை சூரிய ஒளியில் மேற்கொள்ளும் போது சூரியக் கதிர்களில் இருந்து வெளியாகும் விட்டமின் டி, ஹேப்பி ஹார்மோன் எனப்படும் செரோட்டின் அளவை அதிகரிக்க உதவும்.

இதன் மூலம் மனச்சோர்வு, மன அழுத்தம், பதட்டத்தை குறைத்து மனதை ஒருநிலைப்படுத்தி நியாபகத் தன்மையை அதிகரிக்க உதவும். அதே நேரத்தில் நம் சுவாசமும் சீராகும். பெண்கள் உணவில் பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம். பொதுவாகவே மைதா உணவுகள் மற்றும் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் பக்க விளைவுகளை தவிர்க்கலாம். தூங்குவதற்கு முன் பசும்பாலில் பூசணி விதை மற்றும் பாதாம் சேர்த்து பருகினால், தூக்கம் நல்லா வரும். அண்மையில் நடத்திய ஓர் ஆய்வில் PMS, PDMM இவற்றுக்கு உடலில் காணப்படும் வைட்டமின் மற்றும் மினரல் குறைபாடுகளே என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பெண்களுக்கு ஒரு நாளைக்கு கால்சியம் (1200 மிகி), மெக்னீசியம் (360 மிகி), வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி6 (50-100 மிகி) அவசியம். இதில் ஏதேனும் ஒன்றில் குறைபாடு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்’’ என்றார் தீபா.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post PMDD பிரச்னைக்கு தீர்வளிக்கும் அரோமா தெரபி! appeared first on Dinakaran.

Tags : kumkum Doshi ,Dinakaran ,
× RELATED வாஷிங்மெஷின் பராமரிப்பு