×

திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக திருச்சி – கொள்ளிடம் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானத்தில் சேதம் :நெடுஞ்சாலைத்துறை விளக்கம்

திருச்சி : திருச்சி கொள்ளிடம் உயர்மட்ட மேம்பால கட்டுமானத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து நெடுஞ்சாலைத்துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,”திருச்சி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புக் கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள சென்னை-திருச்சி-திண்டுக்கல் சாலையில் (கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 2014-15 ல் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மூலம் உயர் மட்ட பாலம் கட்டும் பணி 24 கண்களுடன் 792 மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டது.

2018-இல் காவேரியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டதால் பாலத்திற்கு இணையாக இருந்த பழைய இரும்பு பாலத்தில் கண் 18 19 சேதமடைந்து அடித்துச்செல்லப்பட்டது. புதிய பாலத்தின் பாலத் தூண் 17, 18, 19,20,21 கீழ் ஆகியவற்றில் உள்ள நிலத் தூண்கள் வரையில் மணல் அரிப்பு ஏற்பட்டு இரண்டிலிருந்து நான்கு மீட்டர் ஆழம் வரை பைல் கேப் மட்டத்திற்கு மண்ணரிப்பு ஏற்பட்டது.

இதனை தடுக்கும் விதமாகவும், பாலத்தின் உறுதித் தன்மையை மேம்படுத்தும் வகையிலும் மேற்குறிப்பிட்ட சாலை பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆற்றுப் படுகையைப் பாதுகாக்கும் வகையிலும் பால அடிமானத்தின் அருகில் மணல் சேர்வதற்காகவும் ரூபாய் 6.55 கோடி மதிப்பீட்டில் 800 மீட்டர் நீளத்திற்கு மண் தாங்கு சுவர் (Bed Protection wall) அமைப்பதற்காக, 19.5.2020 அன்று புதிய சேவை திட்ட மூலம் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 300 மீட்டர் ஆர்சிசி தடுப்புச் சுவரும். 492 மீட்டர் பிசிசி தடுப்புச்சுவரும் அமைக்கப்பட்டன.

தற்போது பருவ மழை காரணமாக கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழையினால் காவேரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையிலிருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கன அடி நீர் 31.07.2024 அன்று இரவு திறந்து விடப்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்ட அதிக அளவு நீர் வரத்து கொள்ளிடம் ஆற்றில் திருப்பிவிடப்பட்டதால் பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மண் தாங்கு சுவரில் ஏறத்தாழ 30 மீட்டர் அளவு பாலம் கண் 22, 23 க்கு இடைப்பட்ட பகுதியில் சற்று மேல் நோக்கி தடுப்புசுவரானது நகர்த்தப்பட்டுள்ளது என தெரியவருகிறது.நீர்வரத்து தொடர்ந்த வண்ணம் அதிகரித்து வருவதால் பாதிப்படைந்துள்ள மண்தாங்கு சுவரின் தற்போதைய நிலை குறித்து முழுமையாக அறிய இயலவில்லை. மேலும் நீர்வரத்து குறைந்த பிறகே பாதிப்படைந்துள்ள தாங்கு சுவரின் விவரங்கள் அறிய இயலும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக திருச்சி – கொள்ளிடம் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானத்தில் சேதம் :நெடுஞ்சாலைத்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Chennai-Trichi-Dindigul road ,Trichy Highway Construction ,Fort ,Kolindin River ,Dinakaran ,
× RELATED விதிமீறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகராட்சிக்கு ஆணை