×

நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என்பது வதந்தி.. அபாயம் உள்ள இடங்களை வல்லுநர் குழு ஆய்வு : மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

நீலகிரி : நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”வயநாட்டில் ஏற்பட்டதுபோல் நீலகிரியிலும் பெரும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக வளைதளங்களில் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் பயனுக்காகக் கட்டுப்பாட்டு அறைகள் போர்க்கால அடிப்படையில் இயங்கி வருகிறது.

வலைத்தளங்களில் பரவும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். நிலச்சரிவு குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரியில் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களை ஆய்வு செய்ய இந்த வாரத்தில் இந்திய புவியியல் துறையைச் சேர்ந்த வல்லுனர் குழு வரவுள்ளது.மாவட்ட நிர்வாகத்தால் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களை வல்லுநர் குழு ஆய்வு செய்யும். பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வல்லுநர் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்.

அந்த குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக கேரள மாநிலம் வயநாட்டில் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்களை நிலச்சரிவு புரட்டிப் போட்டது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 1000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 298 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை. இதனிடையே நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

The post நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என்பது வதந்தி.. அபாயம் உள்ள இடங்களை வல்லுநர் குழு ஆய்வு : மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,District ,Ruler Lakshmi Bhya ,Neelgiri ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிற சீகை மர பூக்கள்