மூணாறு: வயநாடு நிலச்சரிவில் தாயை இழந்த குழந்தைகளுக்கு, இடுக்கியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் தாய்ப்பால் கொடுத்து வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகின்றன. இதைப் பார்த்த பல பெண்கள், தாய்ப்பால் கொடுக்க முன்வந்துள்ளனர்.கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள உப்புதரை பகுதியைச் சேர்ந்தவர் சஜின் (35), விவசாயி.
இவரது மனைவி பாவனா (30). இவர்களுக்கு ஒரு பெண், ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். வயநாடு நிலச்சரிவில் 300 பேர் இறந்த நிலையில், 300க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த கோரச்சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில், நிலச்சரிவில் தாயை இழந்து பாலுக்காக ஏங்கி தவிக்கும் குழந்தைகளின் நிலை குறித்து ஊடகங்கள் மூலம் அறிந்த பாவனா வேதனையடைந்தார். நிலச்சரிவில் தாயை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடிவு செய்தார்.
இது குறித்து தனது கணவரிடம் கேட்டு, அவரது சம்மதம் பெற்றார். இதை தொடர்ந்து ‘வயநாட்டில் தாயை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வேண்டும் என்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்’ என தனது செல்போன் எண்ணை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதைப் பார்த்து வயநாட்டில் உள்ள முகாமில் இருந்து பாவனாவிற்கு அழைப்பு வந்தது. இதையடுத்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு வயநாடு முகாமிற்கு சென்ற பாவனா, அங்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து வருகிறார். பாவனாவின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும், திருமணமான பல பெண்கள், தாயில்லாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முன்வந்துள்ளனர்.
The post வயநாடு நிலச்சரிவில் தாயை இழந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் இளம்பெண்: ஈரநெஞ்சத்திற்கு குவியும் பாராட்டுகள் appeared first on Dinakaran.