×

திருவண்ணாமலை அருகே இந்திய விமானப்படை வீரர்கள் முகாம்: அதிநவீன ரேடார் கருவிகள் பொருத்தி போர் விமானங்களின் நடமாட்டத்தை கண்டறியும் பயிற்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இந்திய விமானப்படை வீரர்கள் அதிநவீன ரேடார் கருவியை பொருத்தி, போர் விமானங்களின் நடமாட்டங்களை கண்டறியும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை- செங்கம் சாலையில், அத்தியந்தல் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் இந்திய விமானப்படை வீரர்கள் சிறப்பு பயிற்சி முகாம் அமைத்துள்ளனர். இந்த முகாமில் 120க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும், இந்திய விமானப்படையின் அதிநவீன ரேடார் கருவிகள் இந்த பயிற்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவண்ணாமலை- செங்கம் சாலையில் பெரிய கோலாப்பாடி கிராமத்தில் உள்ள சிட்கோ திறந்த வெளி மைதானத்திலும் இதே போன்ற மற்றொரு சிறப்பு பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த முகாமிலும் சுமார் 70 விமான படை வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.

அங்கும் அதிநவீன ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு பயிற்சி முகாம்களும் வரும் 15ம் தேதி வரை இங்கு செயல்படும் என தெரிகிறது. இந்திய விமானப் படையின் அதிநவீன ரேடார் கருவிகள் மூலம், வெளிநாட்டு போர் விமானங்களின் வான் வழி நடமாட்டங்கள் கண்காணிப்பது எப்படி என்பது குறித்து விமானப்படை வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இந்திய வான்வெளி எல்லை பகுதிக்குள், வெளிநாட்டு போர் விமானங்கள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை கண்காணிப்பதற்காக இந்த ரேடார் கருவிகள் பயன்படுகின்றன. மேலும், போர் விமானங்கள் துல்லிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருப்பது குறித்து, இந்த ரேடார் கருவிகள் முன்கூட்டியே தகவலை திரட்டும் திறன் கொண்டது.

எனவே, தற்போது இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும் அதிநவீன ரேடார் கருவிகளை இந்த பகுதிகளில் பொருத்தி வான்வெளியில் போர் விமானங்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதன் சாத்தியம் குறித்து ஆய்வு நடப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அங்கு முகாமிட்டுள்ள விமானப்படை வீரர்களிடம் கேட்டபோது, பாதுகாப்பு நலன் கருதி எந்த தகவல்களையும் வெளியிட முடியாது என்றனர். மேலும், ரேடார் பயிற்சிக்காக தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இது வழக்கமாக நடைபெறும் பயிற்சி தான் என்றும் தெரிவித்தனர். ஏற்கனவே ஜவ்வாதுமலை தொடரில் உள்ள காவனூர் பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு மையம் செயல்படுகிறது.

உலகின் வேறு எங்கும் இல்லாத சிறப்பு அம்சமாக காவனூர் பகுதியில் இருந்து தொலைநோக்கி கருவிகள் மூலம் கோள்களின் நடமாட்டத்தை கண்டறியும் சாத்தியங்கள் அமைந்திருந்ததால், அங்கு விண்வெளி ஆய்வு மையம் ஏற்படுத்தப்பட்டது. அதேபோல, திருவண்ணாமலை பகுதியில் மிகத் துல்லியமான வானிலை காரணமாக இங்கு ரேடார் கருவிகளை முழுமையாக பயன்படுத்த சாத்தியம் இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, இரண்டு தற்காலிக மையங்களிலும் தற்போது நடைபெறும் ஆய்வுப் பணியின் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை பகுதியில் இந்திய விமானப்படையின் நிரந்தர பயிற்சி மையம் மற்றும் ரேடார் கண்காணிப்பு மையம் அமையும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post திருவண்ணாமலை அருகே இந்திய விமானப்படை வீரர்கள் முகாம்: அதிநவீன ரேடார் கருவிகள் பொருத்தி போர் விமானங்களின் நடமாட்டத்தை கண்டறியும் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Indian Air Force Camp ,Tiruvannamalai ,Indian Air Force ,Athyanthal village ,Tiruvannamalai-Sengam road ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் கைது