×

தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் தபால் தலை கண்காட்சி

தஞ்சாவூர், ஆக. 2: தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்திய அஞ்சல் துறை சார்பில் மாநில அளவிலான தபால் தலை கண்காட்சியின் விவரங்கள் அடங்கும் தொகுப்பு வெளியிடப்பட்டது. இந்திய அஞ்சல் துறை சார்பில் தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் மாவட்ட அளவிலான தபால் துறை கண்காட்சி வரும் அக்டோபர் மாதம் 8 மற்றும் 9ம் தேதிகளில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கரிகால் சோழன் கலையரங்கில் நடைபெற உள்ளது. தபால்தலை கண்காட்சி விவரங்கள் அடங்கிய தொகுப்பு நேற்றுமுன்தினம் தஞ்சாவூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் தபால்தலை சேகரிப்பு குழு உறுப்பினர் மூலம் வெளியிடப்பட்டது. தபால்தலை கண்காட்சியின் விவரங்கள் அடங்கிய தொகுப்பில் பாரம்பரியத்தை மீட்டு நிலைநாட்டும் விதமாக கருப்புகவுனி நெல் விதைமாதிரி இணைத்து வழங்கப்படுகின்றது.

தஞ்சாவூர் அஞ்சல் கோட்டம் மற்றும் கும்பகோணம். பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டங்களிலும் நேற்றுமுன்தினம் தபால்தலை கண்காட்சியின் விவரங்கள் அடங்கிய தொகுப்பு வெளியிடப்பட்டது. பல்வேறு கண்காட்சிகளில் வெற்றிபெற்ற அஞ்சல் தலைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த அஞ்சல் தலைகள் மேற்கண்ட கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படும். இந்த கண்காட்சியில் பள்ளிகளும் மற்றும் தபால் தலை சேகரிப்பாளர்களும் தங்களுடைய தபால் தலை சேகரிப்புகளை காட்சிப்படுத்த வரவேற்கப்படுகிறார்கள். மேலும் இக்கண்காட்சியை ஒட்டி மாணவர்களுக்கிடையே பல்வேறு சிறப்பு போட்டிகள் நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு https://kalanchiyam@79e.blogspot.in அல்லது முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர், தஞ்சாவூர் அஞ்சல் கோட்டம் தஞ்சாவூர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தஞ்சை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

The post தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் தபால் தலை கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Stamp Exhibition ,Tamil University Campus ,Thanjavur ,State Level Stamp Exhibition ,Indian Postal Department ,Tamil ,University ,Dinakaran ,
× RELATED கங்கைகொண்ட சோழபுரத்தில் மரபு நடை’ நிகழ்ச்சி