* மீனவர்கள் மறியல்
* போராட்டத்தால் பதற்றம்
ராமேஸ்வரம்: கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் படகு மீது, இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில், ராமேஸ்வரம் மீனவர் படுகொலை செய்யப்பட்டார். 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவர் மாயமானார். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. இரவு மீன் பிடித்து கொண்டிருந்தபோது ராமேஸ்வரம் மீனவர்களை, 10க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். அப்போது கடற்படையின் 2 ரோந்து படகுகள் ஒரு விசைப்படகை விரட்டி சென்று மோதியது. இதில் ராமேஸ்வரம் மீனவர் கார்த்திகேயனின் படகு, இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியதில் கடலில் மூழ்கியது. பல லட்சம் மதிப்பிலான படகு உடைந்து முழுவதும் கடலில் மூழ்கிய நிலையில், படகில் இருந்த மீனவர்கள் மூக்கையா(54), முத்து முனியாண்டி(57), மலைச்சாமி(59), ராமசந்திரன்(64) ஆகிய 4 பேரும் கடலில் மூழ்கி தத்தளித்தனர்.
இதில் கடலில் மாயமான மீனவர்களை இலங்கை கடற்படையினர் தேடியதில், மீனவர் மலைச்சாமி உடலில் பலத்த காயத்துடன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். மூக்கையா, முத்து முனியாண்டி ஆகியோரை மீட்ட கடற்படையினர், இலங்கை யாழ்ப்பாணம் புங்குடதீவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் மாயமான மீனவர் ராமச்சந்திரனை தேடி வருகின்றனர். இலங்கை கடற்படையின் அத்துமீறிய தாக்குதலால் பெரும் கொந்தளிப்பு அடைந்த பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் மீனவர்கள் நேற்று காலையில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை டோக்கன் அலுவலகம் முன்பு திரண்டனர். படுகொலையான மீனவர் மலைச்சாமியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், இலங்கை கடற்படை வசம் உள்ள மீனவர்களை உடனே விடுவிக்க கோரியும், மீனவர்கள் பிரச்னையை கண்டுகொள்ளாத ஒன்றிய அரசை கண்டித்து தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஊர்வலமாக சென்று, ராமேஸ்வரம் தாலுகா அலுவலகம் முன்பு ராமேஸ்வரம் – ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலெக்டர் சிம்ரன் ஜீத் காலோன் தலைமையில், எஸ்பி சந்தீஷ், மீன்வளத்துறை இயக்குநர் பிரபாவதி, ஆர்டிஓ ராஜ மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீனவர்களின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர். நேற்று காலை 7 மணிக்கு துவங்கிய மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து மாலை வரை நீடித்ததால் ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து மத்திய, மாநில புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
The post இலங்கை கடற்படை படகால் மோதி ராமேஸ்வரம் மீனவர் கொலை; 2 பேருக்கு தீவிர சிகிச்சை: ஒருவர் மாயம் appeared first on Dinakaran.