ராணுவத்தின் கேரளா-கர்நாடகா பொறுப்பு வகிக்கும் மேஜர் ஜெனரல் வினோத் மேத்யூ கூறியது: வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு நம் நாடு கண்ட பெரும் பேரழிவாகும். இந்திய ராணுவம் இதுவரை இப்படி ஒரு மோசமான பேரழிவை பார்த்ததில்லை. பெருமளவு பகுதி மண்ணுக்குள் புதைந்தது இதுவரை அதிகமாக வேறு எங்குமே நடைபெறாத ஒரு நிகழ்வாகும். புஞ்சிரிமட்டம், சூரல்மலை மற்றும் முண்டக்கை என்ற மூன்று பகுதிகள் மண்ணோடு மண்ணாகி விட்டது. பலியானவர்கள் எண்ணிக்கை நாம் நினைப்பது விட மிக அதிகமாக இருக்கும். பல இடையூறுகள் இருந்தபோதிலும் நம் ராணுவம் மிகச்சிறப்பாக செயல்பட்டு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
புஞ்சிரிமட்டம் என்ற மலை தான் நிலச்சரிவின் தொடக்கப் பகுதியாகும். இங்கு நிலச்சரிவு ஏற்படலாம் என முன்பே தெரிந்ததால் அங்கிருந்து பலர் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக 20 பேர் அங்கு சிக்கிக்கொண்டனர். இந்த தகவல் தெரிந்ததும் அடர்ந்த காடு, சீறிப்பாயும் காட்டாறு மற்றும் செங்குத்தான பாதையை தாண்டி ராணுவம் அங்கு சென்று 20 பேரையும் மிகவும் சாகசமாக மீட்டது. உயிரை பணயம் வைத்து நம் ராணுவ வீரர்கள் மேற்கொண்ட மீட்புப் பணியால்தான் இந்த நிலச்சரிவின் பாதிப்பை ஓரளவு குறைக்க முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
The post இதுபோன்ற ஒரு பேரழிவை இந்திய ராணுவம் பார்த்ததில்லை: மேஜர் ஜெனரல் வினோத் மேத்யூ பேட்டி appeared first on Dinakaran.