வருசநாடு, ஆக. 2: கண்டமனூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் ராமச்சந்திராபுரம் கிராமத்தில் நாட்டாமை தெருப்பதியில் 150க்கும் அதிகமான வீடுகள் உள்ளது. இந்த தெருவில் பாதியளவில் மட்டுமே கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இதனால் வாய்க்கால் வழியாக வரும் கழிவு நீர் தெருவின் மற்ற பகுதிகளில் குளம் போல தேங்கி நின்றது. அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியானதால் அந்த பகுதி பொதுமக்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வந்தனர்.
கடந்த ஆண்டு மற்ற பகுதிகளுக்கு கழிவுநீர் வாய்க்கால் கட்டுவதற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் சில வீடுகள் தெருவை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததால் அந்த பணிகள் பாதிப்படைந்தது. இதுதொடர்பாக பொதுமக்கள் கடமலை-மயிலை ஒன்றிய ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து நேற்று ஒன்றிய ஆணையர்கள் ஜெயபிரகாஷ், சிவகுமார் ஆகியோர் புதூர் ராமச்சந்திராபுரத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைவில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தனர். ஆய்வின்போது ஒன்றிய பொறியாளர் நாகராஜ் நாட்டாமை வெற்றிச்செல்வன், கருணாநிதி சமூக ஆர்வலர் அங்குசாமி, ஆகியோர் உடன் இருந்தனர்.
The post கண்டமனூர் அருகே கழிவுநீர் தேங்கிய பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.