×

இந்தியா கூட்டணியை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது: செல்வப்பெருந்தகை பேச்சு

சென்னை: ஒன்றிய அரசு திட்டமிட்டு தமிழக அரசை பழிவாங்குகிறது என்றும், இந்தியா கூட்டணியை யாராலும் அசைத்துக் கூட பார்க்க முடியாது என்றும் செல்வப்பெருந்தகை கூறினார். தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா சென்னை தி.நகர் சர்.பி.டி. தியாகராயர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் தலைமை வகித்தார். தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் இல.பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், முன்னாள் எம்பி ராணி, மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், டி.செல்வம், அருள்பெத்தையா, எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமார், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், மாவட்ட தலைமை நிலைய செயலாளர்கள் மன்சூர் அலிகான், பூபதி, சம்பத், வட்ட தலைவர் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் தமிழக கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் கோபண்ணா, டாக்டர் கந்தசாமி, தேவராஜ் ஆகியோருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார். பின்னர் காமராஜர் குறித்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் காமராஜர் ஒரு சகாப்தம் என்ற புத்தகத்தையும் வழங்கினார். விழாவில், செல்வப்பெருந்தகை பேசியதாவது:

கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு. எந்த கருத்து வேறுபாடு இருந்தாலும் காமராஜர் மீது யாராலும் குற்றம் சொல்ல முடியாது. பொறுப்பை விட்டு செல்லும் போது எந்த ஒரு அவப்பெயரும் இல்லாமல் செல்ல வேண்டும் என்றே ஒவ்வொரு நாளும் சத்தியமூர்த்தி பவனுக்கு செல்கிறேன். யார் வேண்டுமானாலும் காமராஜரை கொண்டாடலாம். ஆனால், அவரை சொந்தம் கொண்டாடும் உரிமை காங்கிரசுக்கு மட்டும் தான் உள்ளது. பாஜவினர் தலைவர்களை கூட வாடகைக்கு எடுத்துதான் கொண்டாடுகிறார்கள். ஒன்றிய அரசு திட்டமிட்டு தமிழக அரசை பழிவாங்குகிறது. ஆனாலும் இந்தியா கூட்டணியை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

The post இந்தியா கூட்டணியை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது: செல்வப்பெருந்தகை பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Chennai ,Selvaperunthagai ,Union government ,Tamil Nadu government ,Kamaraj ,South Chennai Central District Congress ,Chennai D. Nagar ,Pt. ,Thiagarayar… ,India Alliance ,
× RELATED அகில இந்திய ஒதுக்கீடு: 75% MBBS இடங்கள் நிரம்பவில்லை