செங்கல்பட்டு: செங்கல்பட்டில் உள்ள தேநீர் கடையில் சிலிண்டர் பற்ற வைத்தபோது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பெண் ஊழியர் காயமடைந்தார். செங்கல்பட்டு கேகே தெரு பகுதியைச் சேர்ந்த முன்னா. இவர் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் கருப்பட்டி காபி கடையை நடத்தி வருகிறார். இந்த கடையில் சூனாம்பேடு மீனவர் தெருவைச் சேர்ந்த புவனேஸ்வரி (31) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம்போல கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு டீ கொடுப்பதற்காக புவனேஸ்வரி சிலிண்டர் அடுப்பை பற்ற வைத்துள்ளார்.
அப்போது, சிலிண்டரில் இருந்து அதிகப்படியான எரிவாயு வெளியேறியதால் திடீரென கடை முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில், புவனேஸ்வரிக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த புவனேஸ்வரியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக செங்கல்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post செங்கல்பட்டில் தேநீர் கடையில் தீ விபத்து: பெண் ஊழியர் காயம் appeared first on Dinakaran.