* மனு பாக்கருடன் இணைந்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற பிறகு சரப்ஜோத் சிங் தாங்கள் தங்கியிருக்கும் ‘இந்தியா இல்லத்துக்கு’ சென்றார். அங்கிருந்தவர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். ஆனால் சரப்ஜோத், ‘தயவுசெய்து எனக்கு சாப்பிட ஏதாவது கொடுங்கள்’ என்று பரிதாபமாக கேட்க… அதை கேட்டு நெகிழ்ந்தவர்கள் பதக்கப் பசியை போக்கியவரின் வயிற்றுப் பசிக்கு உணவு அளித்தனர். போட்டி நடைபெறும் இடத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள இந்தியா இல்லத்தில்தான் வீரர்கள் அனைவரும் தங்கி உள்ளனர். அங்கு அவர்களுக்கு இட்லி, தோசை முதல் மட்டன் பிரியாணி வரை இந்திய உணவுகள் தயாரித்து பரிமாறப்படுகின்றன.
* இந்தியாவின் 124 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில், ஒரே விளையாட்டில் 3 பதக்கங்கள் வென்றது இதுவே முதல் முறையாகும். இந்த ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கிசுடுதலில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இதற்கு முன் 2012 ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கிசுடுதலில் தான் அதிகபட்மாக 2 பதக்கங்களை இந்தியா வென்றது. ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் இந்தியா இதுவரை 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்று ஹாக்கிக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது.
* ஆண்கள் பேட்மின்டன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் மலேசியாவின் ஆரோன் சியா – சோஹ் வூய் யிக் ஜோடியுடன் நேற்று மோதிய சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி இந்திய இணை 21-13 என முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றாலும், அடுத்த 2 செட்களையும் 14-21, 16-21 என்ற கணக்கில் இழந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது. இரட்டையர் பிரிவில் பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்த சாத்விக் – சிராக் ஜோடியின் அதிர்ச்சி தோல்வி , இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
* மகளிர் குத்துச்சண்டை 50 கிலோ எடை பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நேற்று களமிறங்கிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நிக்கத் ஜரீன் 0-5 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் வூ யூவிடம் போராடி தோற்றார். வூ யூ 52 கிலோ எடை பிரிவில் (ஃபிளைவெயிட்) நடப்பு உலக சாம்பியன் ஆவார்.
* ஒலிம்பிக் மகளிர் துப்பாக்கிசுடுதல் 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) பிரிவில் நேற்று களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் அஞ்சும் மோத்கில் 584 புள்ளிகளுடன் 18வது இடமும், சிப்ட் கவுர் சம்ரா 575 புள்ளிகளுடன் 31வது இடமும் பிடித்து பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.
* ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஸ்பெயின் நட்சத்திரங்கள் ரபேல் நடால் – கார்லோஸ் அல்கராஸ் இணை 2-6, 4-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக் – ராஜீவ் ராம் ஜோடியிடம் தோற்று வெளியேறியது.
The post ஒலிம்பிக் துளிகள்… appeared first on Dinakaran.