- வருணநாடு
- கிவன்
- கோவில்
- பிறகு நான்
- விருதுநகர்
- வருசநாத்
- விருதுநகர் மாவட்டம்
- கிழவன் கோவில்-பிளவக்கல் 30...
- கிழவன் கோவில்
- தின மலர்
வருசநாடு: வருசநாட்டிலிருந்து தேனி, விருதுநகர் மாவட்டங்களை இணைக்கும் கிழவன் கோவில் பிளவக்கல் மலைசாலைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாட்டிலிருந்து, விருதுநகர் மாவட்டம் கிழவன் கோவில்-பிளவக்கல்லை இணைக்கும் வகையில் மலைச் சாலை அமைக்க 30 ஆண்டுகளுக்கு முன்பு உத்தேசிக்கப்பட்டது. ஆனால், தொடர்ச்சியாக அந்தத் திட்டம் முன்னெடுக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் சுமார் 4 கி.மீ தூரம் நடந்தே செல்லும்நிலை உள்ளது. இந்தப் பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் மலைப் பகுதியில் சாலை அமைப்பதற்கு வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இதனால் காமராஜபுரம் பகுதியிலிருந்து வருசநாடு, மயிலாடும்பாறை, தேனி, உசிலம்பட்டி வழியாக 150 கி.மீ சுற்றி வில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மலைச்சாலை இல்லாததால் இலவம்பஞ்சு, கொட்டை முந்திரி, தக்காளி, கத்தரி, பீன்ஸ், அவரை, பருத்தி உள்ளிட்ட விளைபொருட்ள், காய்கறிகளை தேனி வழியாகச் சென்று விருதுநகர், மதுரை கொண்டு செல்கின்றனர். இதனால் பொருள் விரயம் மற்றும் போக்குவரத்து செலவினம் அதிகரிக்கிறது.
இத்திட்டம் தொடர்பாக அதிகாரிகள் அவ்வப்போது வந்து ஆய்வு செய்தும் செல்கின்றனர். ஆனால் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படாமலே உள்ளது. இந்த மலைச் சாலை அமைந்தால் வருசநாடு வழியாக தேனி மாவட்டத்தில் இருந்து விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளுக்கு குறைந்த நேரத்திலும், குறைந்த செலவினத்திலும் செல்ல முடியும். எனவே இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பாலசுப்பிரமணியபுரம் மலைகிராமவாசி ஈஸ்வரன் கூறுகையில், இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் எங்கள் பகுதி செழிப்பான பகுதியாக மாறிவிடும். மேலும் பேருந்துகளில் சுற்றி செல்லும் அவல நிலை மாறிவிடும் என்றார். காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யர்சாமி கூறுகையில், இந்த மலைச்சாலை அமைந்துவிட்டால் இப்பகுதியில் 5 லட்சம் பேர் பயனடைவார்கள். விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் ஏதுவாக அமையும். இது குறித்து தேனி மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு மற்றும் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து தேனி திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், தேனி மாவட்டம் எல்லை வரை நிதிஒதுக்கீடு செய்து தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட பகுதியைச் சார்ந்த இடங்களில் வனத்துறை அதிகாரிகள் சாலை அமைக்க தடை விதிக்கின்றனர். இந்த சாலை திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
இது குறித்து ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் கூறுகையில், இது சம்பந்தமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக வனத்துறை அமைச்சரிடம் தகவல் தெரிவித்துள்ளேன். இது குறித்து முதல்வர் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார்.
The post கிழவன்கோவில் – பிளவக்கல் மலைச்சாலை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.