×

பசுமையாக காட்சி அளிக்கும் திருப்பூர் கலெக்டர் அலுவலகம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள வளாகம் முழுவதும் இயற்கை வளம் சூழும் வகையில் மரங்கள் நடப்பட்டு அவை வளர்ந்து தற்போது பசுமையாக காட்சி அளிக்கிறது. தமிழகத்தின் 32வது மாவட்டமாக கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து சில பகுதிகளை பிரித்து திருப்பூர் மாவட்டம் 2009ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட பின்பு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு என தனி கட்டிடம் இல்லாத நிலையில் வேளாண்மை துறைக்கு சொந்தமான நிலத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது.

தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் வசதிக்காக திருப்பூர் பல்லடம் சாலையில் அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் வளாகம் கட்ட முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் பணி முடிக்கப்பட்டு பல்லடம் சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறக்கப்பட்டது.

தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன் கூடிய வளாகமாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதில், 40க்கும் மேற்பட்ட அரசு துறைகளுக்கான அலுவலகம், 2 பெரிய மற்றும் 2 சிறிய கூட்ட அரங்குகள், விருந்தினர் மாளிகை, மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் உள்ளன. இதற்கு, பின்புறமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வேலைவாய்ப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, அரசு மருத்துவ காப்பீடு பதிவு செய்யும் அலுவலகம், இ-சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு பல்வேறு சேவைகளை பெற தினம் தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும், கோரிக்கைகள் தொடர்பாக புகார் மனு அளிக்கவும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கும், மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கும் வருகை தருகின்றனர்.‌

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுமான பணிகள் தொடங்கியபோது கலெக்டர் அலுவலகத்திற்குள் பசுமைப் பரப்பை அதிகரிக்க மரக்கன்றுகள் நடப்பட்டது. இவை தற்போது வளர்ந்து பெரிய மரங்களாக நிழல் தரும் இயற்கை கொடையாக மாறியுள்ளது. இதன் காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பல்வேறு சேவைகளை பெற வரும் பொதுமக்களும், அலுவலர்களும் இளைப்பாறக்கூடிய இடமாக சோலையாக மாறி உள்ளது.

இங்கு வேம்பு, புங்கை, வாகை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களும் வளர்ந்து அழகுற காட்சி அளிக்கிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட மரங்களும் நூற்றுக்கணக்கான செடி வகைகளும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றிலும் அழகுற காட்சியளிக்கிறது. வளர்ந்து உயர்ந்த மரங்கள் மனிதர்கள் இளைப்பாற மட்டுமல்லாது வாகனங்களுக்கான நிழற்கூரைகளாகவும் அமைந்துள்ளது. இங்குள்ள மரங்களுக்கும், செடி வகைகளுக்கும் தன்னார்வ அமைப்புகள் மூலம் தினமும் காலை, மாலை வேளைகளில் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வருகிறது. தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படும் போது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

மறு நடவு செய்யப்பட்ட மரம்
திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் சாலை உள்ளிட்ட பணிகளுக்காக வெட்டப்பட இருந்த மரங்கள் தன்னார்வ அமைப்புகள் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மறு நடவு செய்யப்பட்டது. தற்போது, அவை துளிர்விட்டு அதனை சுற்றியும் மரங்கள் வளரவும் உறுதுணையாக உள்ளது. இதனை சுற்றி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதால் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்கள் இளைப்பாறவும், போட்டி தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கு அமைதி சார்ந்த சிறந்த இடமாகவும் காட்சியளிக்கிறது.

பறவைகளுக்கான இருப்பிடம்
மனிதர்களுக்கு மட்டுமல்லாது பறவைகளுக்கும் இந்த இடம் பிடித்தமானதாக உள்ளது. இங்கு வளர்ந்து உயர்ந்த மரங்களில் பறவைகள் தங்கள் இருப்பிடத்தை உருவாக்கி நிரந்தரமாக தங்கி உள்ளன. இது போன்ற பறவைகளுக்கு உணவு தேவைக்காக மரங்களில் அமைக்கப்பட்டுள்ள மர தட்டைகளில் தானியமும், மண்பானைகளில் தண்ணீரும் ஊற்றப்படுகிறது. பசுமையான பகுதிக்குள் நுழையும்போதே வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறப்பதை கண்களால் பார்த்து மெய்சிலிர்க்க முடிகிறது.

The post பசுமையாக காட்சி அளிக்கும் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் appeared first on Dinakaran.

Tags : Tirupur Collector ,Tirupur ,Tirupur District Collector ,32nd district ,Tamil Nadu ,Coimbatore ,Erode ,
× RELATED நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிய சுங்கச்சாவடியை அகற்ற ஆணை