நத்தம்: நத்தம் வனச்சரகத்தை சேர்ந்த கரந்தமலையில் உள்ள அருவிகள், கன்னிமார், அய்யனார், கருப்பு கோயில்கள், காப்புக்காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். தற்போது இப்பகுதிகளில் உள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் காட்டுமாடுகள் உள்ளிட்ட பிற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. மேலும் இப்பகுதியை சுற்றியுள்ள இடங்களில் காட்டுமாடு, மனித மோதல்கள் ஏற்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், இழப்பீடுகள் வழங்கப்பட்டும் உள்ளது.
எனவே இப்பகுதி வனவிலங்குகள் உலாவும் ஆபத்து நிறைந்த பகுதியாகும். இப்பகுதிகளில் தனிநபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்துமீறி உள்ளே நுழைந்து அங்குள்ள அருவிகளில் குளிப்பது, புகைபிடித்தல், மது அருந்துதல் குறித்த படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது போன்றவை குற்றங்களாகும். இனி இப்பகுதிகளில் அத்துமீறி நுழைந்தால் தமிழ்நாடு வனச்சட்டம் 1882 V சட்டம் பிரிவு 21ன் கீழ் உட்பிரிவு d-ன்படி தண்டிக்கப்படும் குற்றங்களாக கருதப்படும்.
எனவே மேற்கண்ட செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தால் அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும். இதுகுறித்த அறிவிப்பு பலகை அப்பகுதியில் வைக்கப்பட்டு வனத்துறை மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வனச்சரக அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் கரந்தமலை பகுதியில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை நத்தம் வனச்சரகர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
The post நத்தம் வனச்சரகம் கரந்தமலை அருவிகளுக்கு தனிநபர்கள் செல்ல தடை: அறிவிப்பு பலகை வைத்து வனத்துறையினர் எச்சரிக்கை appeared first on Dinakaran.